சேலம் அதிமுக நிர்வாகி கொலை புதிய தலைமுறை
தமிழ்நாடு

‘திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்க’- படுகொலை செய்யப்பட்ட சேலம் அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினர்!

சேலம் அதிமுக நிர்வாகி சண்முகம் படுகொலையில். “திமுக கவுன்சிலரின் கணவரை கைது செய்ய வேண்டும்” எனக்கூறி, சண்முகத்தின் குடும்பத்தார் மட்டும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெனிட்டா ரோஸ்லின், PT WEB

செய்தியாளர் - தங்கராஜூ

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டியைச் சேர்ந்தவர் அதிமுக நிர்வாகி சண்முகம். இவர் நேற்று இரவு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன் கோயில் தெரு அருகே அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதனால், அதிர்ச்சிக்குள்ளான உறவினர்கள் மற்றும் அதிமுகவினர் சண்முகத்தின் இறப்புக்கு காரணம் திமுக பிரமுகர் ஒருவர்தான் என்று கூறி, அவரை கைது செய்யுமாறும், அதுவரை உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படுகொலை செய்யப்பட்ட சண்முகத்தின் மனைவி பரமேஸ்வரி இதுகுறித்து தெரிவிக்கையில், “சேலம் மாநகராட்சி 55-வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ், கூலிப்படையை வைத்து என் கணவரை கொலை செய்துவிட்டார்” என்று தெரிவித்துள்ளார். மேலும் சண்முகத்தின் உறவினர்களும், “சடலத்தை வாங்க மாட்டோம், லாட்டரி சீட் வியாபாரியும் திமுகவை சேர்ந்தவருமான சதீஷை கைது செய்ய வேண்டும்” என பிரேத பரிசோதனை கூடம் முன்பாக திரளாக வந்து கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவை சேர்ந்த சதீஷ், கடந்த 2 ஆண்டுகளாக தாதகாப்பட்டியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை செய்து வந்தாரென கூறப்படுகிறது. இதன் காரணமாக சண்முகத்திற்கும் சதீஷ்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சண்முகத்தின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில்தான், சண்முகத்தை சதீஷ் கூலிப்படைகளை ஏவி வெட்டி படுகொலை செய்துள்ளதாக சண்முகத்தின் மனைவியும் குடும்ப உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

சண்முகத்தின் உடலை குடும்பத்தினர் வாங்க மறுக்கவே, போலீசார் சண்முகத்தின் உடலை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், சேலம் மாநகர அதிமுக நிர்வாகிகள் பலரும், சேலம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளம் மூலம் தெரிவிக்கையில், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது. தினசரி கொலை, கொள்ளை நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது என்று பலமுறை நான் கூறியபோதும், இந்த திமுக அரசு சட்டம்- ழுங்கை பாதுகாக்க எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதுடன், இக்கொலைக் குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே கொலை குற்றவாளிகளை கைது செய்வதற்காக உதவி ஆணையர்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உயிரிழந்த சண்முகம், 2011 முதல் 2016ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டியில் அதிமுக மண்டல குழுத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழிலிலும் அவர் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.