Water tank pt desk
தமிழ்நாடு

சேலம்: குடிநீர் தொட்டியில் சடலமாக மிதந்த நாய்க்குட்டி – அதிர்ச்சியில் 5 கிராம மக்கள்!

தாரமங்கலம் அருகே நீர்தேக்கத் தொட்டியில் நாய்க்குட்டி ஒன்று இறந்து கிடந்தள்ளது. நாயை அடித்து தண்ணீர் தொட்டியில் போட்டவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

webteam

செய்தியாளர்: K.தங்கராஜூ

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே துட்டம்பட்டி கிராம ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆட்டையான்வட்டம் பகுதியில் ஐந்து கிராமங்கள் பயன்படும் வகையில், தரைமட்ட நீர்தேக்கத் தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து அருகில் உள்ள அங்கன்வாடி மையம், அரசு நடுநிலைப் பள்ளி, கொடியன் வளவு, ஆட்டையன்வளவு, கந்தாயி வட்டம், ஆரான்வட்டம், ஆப்பவட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கும் நீர் நிரப்பப்படுகிறது.

Villagers

இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர், அங்கு சுற்றித் திரிந்த நாய் குட்டியை அடித்து நீர்த் தேக்கத் தொட்டியில் போட்டுள்ளனர். இதை அறியாமல் அந்த தொட்டியில் தேக்கி வைத்திருந்த தண்ணீரையே மக்களுக்கும், மாணவர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். தொட்டியில் நாய் கிடந்த தண்ணீரை சுத்தம் செய்யாமலேயே விநியோகம் செய்த நிலையில், தண்ணீர் நாற்றம் அடித்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் குடிநீர் விநியோகிப்பாளர் ஆறுமுகத்திடம் தெரிவித்தனர்.

இதையடுத்து தண்ணீர் தொட்டியில் பார்த்த போது, மூடி திறக்கப்பட்டு, தண்ணீரில் நாய்க்குட்டி ஒன்று சடலமாக மிதந்துள்ளது. இதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு இறந்த நாய்க் குட்டியை வெளியே எடுத்து போட்டனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்துவதாகக் கூறிய நிலையில், தண்ணீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் தொட்டியை முழுமையாக சுத்தம் செய்து பிறகு தண்ணீரை ஏற்றி விநியோகம் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Water tank

இதையடுத்து தண்ணீர் தொட்டியில் நாய்க் குட்டியை அடித்து போட்ட மர்ம நபர்களை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் வேறு எதை வேண்டுமானாலும் போடுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால், முழுமையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.