தமிழ்நாடு

சேலம்: ஆதரவற்று சாலையில் கிடந்த ஆண் குழந்தை உயிரிழப்பு... போலீசார் விசாரணை

சேலம்: ஆதரவற்று சாலையில் கிடந்த ஆண் குழந்தை உயிரிழப்பு... போலீசார் விசாரணை

kaleelrahman

ஓமலூர் அருகே சாலையோரம் மீட்கப்பட்ட ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை வீசி சென்றது யார் என்பது குறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள எம்.செட்டிபட்டி கிராமத்தில் உள்ள குமரன்காடு பகுதியை சேர்ந்தவர் பவுனா. இவரது வீட்டின் அருகில் கடந்த 27-ஆம் தேதி சாலையோரத்தில் பிறந்து சில மணி நேரமே ஆனா அழகான ஆண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை அக்கம்பக்கத்தினர் மீட்டு தொளசம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை கைப்பற்றி விசாரித்தனர். பச்சிளம் குழந்தையை மர்ம நபர் வீசி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அந்த குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட குழந்தை தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்தநிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனைத்தொடர்ந்து பெரியேரிப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பு வகிக்கும் சரவணன் தொளசம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் தொளசம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த குழந்தை யாருடையது, அதனை வீசி சென்ற மர்ம நபர் யார், எதற்காக வீசி சென்றனர் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.