சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட பீகாரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவனின் 7 வயது சிறுமியும், இதே உடல்நல பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சைதாப்பேட்டை அமித் காலணியில் பீகாரைச் சேர்ந்த ராகேஷ் குமார், சுமன் ராணி தம்பதியின் இருகுழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டதில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளார். சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீகாரைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 4 குழந்தைகளுடன் சென்னை சைதாப்பேட்டையில் தங்கி கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில்தான், கடந்த இரு தினங்களாக சிறுவனுக்கும் சிறுமிக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதன்பின்னர் அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 11 வயது சிறுவன் யுவராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இதுதொடர்பாக சைதாப்பேட்டை காவல்துறையினர் தீவிர சிகிச்சை மேற்கொண்டனர்.
அதில், மக்கள் குடிக்கக்கூடிய மெட்ரோ தண்ணீரில் கழிவு நீர் கலந்தது மட்டுமே சிறுவனது உயிரிழப்புக்குக் காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மெட்ரோ தண்ணீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், இங்கு 20க்கும் மேற்பட்ட மக்களுக்கு வயிற்றுப்போக்குடன் கூடிய உடல்நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மெட்ரோ தண்ணீர் நிர்வாகத்திடம் தகவல் அளித்தபோதிலும், அவர்கள் மெத்தனம் காட்டியதால்தான் சிறுவன் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டுகின்றனர். காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.