திருமுருகன் காந்தியை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, அதில் அரசுக்கு எதிரான கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப் பதிந்த நிலையில், திருமுருகன் காந்தி விசாரணைக்கு ஆஜராகவில்லை என தெரிகிறது. இதனிடையே ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து திருமுருகன் காந்தி பேசினார். இதையடுத்து இந்தியா திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு விரைந்த தமிழக காவல்துறையினர், திருமுருகன் காந்தியை சென்னை அழைத்து வந்தனர். தேசத்துரோக செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருப்பதால் திருமுருகன் காந்தியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருமுருகன் காந்தியை சிறையிலடைக்க உத்தரவிட முடியாது என்றது. நீதிமன்றக் காவலில் திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிடவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. சென்னை சைபர் க்ரைம் காவல்துறை விசாரணை அதிகாரி, 24 மணி நேரம் விசாரணை திருமுருகன் காந்தியிடம் நடத்திக்கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.