தமிழ்நாடு

'சாயாவனம் சாய்ந்தது' - எழுத்தாளர் சா.கந்தசாமி பற்றி சில நினைவுகள்...!

'சாயாவனம் சாய்ந்தது' - எழுத்தாளர் சா.கந்தசாமி பற்றி சில நினைவுகள்...!

webteam

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமான சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் சா. கந்தசாமி பற்றிய சில நினைவுகள்.  

நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் 1940 ஆம் ஆண்டு பிறந்தவர். சாயாவனம் புதினம் (1968) மூலம் தமிழ் எழுத்துலகில் மிகச்சிறந்த எழுத்தாளராக சா. கந்தசாமி அறியப்பட்டார். நேஷனல் புக் டிரஸ்ட் அமைப்பால் நவீன இந்திய இலக்கியங்களில் ஒன்றாகவும் அந்த புதினம் அறிவிக்கப்பட்டது. “மனிதன் சாசுவதமில்லை என்றாலும் மானுடம் சாசுவதமானது. மனிதனுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் என் நாவல்கள்” என்றார் சா, கந்தசாமி.

தன் எழுத்து பற்றி குறிப்பிட்டுள்ள அவர், "எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இதுவொரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1995 ஆம் ஆண்டு தமிழக அரசின் ஆய்வுக்கான ஃபெல்லோஷிப் பெற்றார் சா. கந்தசாமி.  தென்னிந்திய சுடுமண் சிலைகள் பற்றிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு சென்னை பொதிகை தொலைக்காட்சி காவல்தெய்வங்கள் என்ற 20 நிமிட ஆவணப்படத்தை உருவாக்கியது. இவரது தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதையை  இயக்குநர் வஸந்த் குறும்படமாகத் தயாரித்தார்.  எழுத்தையும் தாண்டி ஓவியம், சிற்பம், ஆவணப்படம், சினிமா என கலைவெளியின் சகல பரப்புகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டுவந்தார் சா. கந்தசாமி.  

தமிழின் முக்கிய படைப்பாளிகள்  சிலர்  அவரைப் பற்றிய நினைவுகளை ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர். அவற்றில் சில பதிவுகள்...

எழுத்தாளர் சி. மோகன்

கசடதபற இதழ், தக்கையின் மீது நான்கு கண்கள் சிறுகதைத் தொகுப்பு, சாயாவனம் நாவல் ஆகியன மூலம் என் இளமைக் காலத்தில் உத்வேகமிக்க படைப்பு சக்தியாக இருந்தவர் சா.கந்தசாமி.  சென்னை வாழ்க்கையில் இணக்கமான நண்பர். என்னைவிடத் துடிப்பாகவம் ஆரோக்கியமாகவும் இருந்தவர். 

கலை இலக்கிய விமர்சகர் இந்திரன்

என் கல்லூரி நாளில்கசடதபற இதழில் தக்கையின் மீது நான்கு கண்கள் எனும் அவரது சிறுகதையைப் படித்து அவரது வாசகனாக ஆனேன். மும்பையிலிருந்து அவரை சந்திப்பதற்காக சென்னை வந்து சந்தித்தேன். சாயாவனம் எனும் வாசகர் வட்டம் வெளியிட்ட சா கந்தசாமியின் நாவலில் ஒரு ஆலையை நிறுவுவதற்காக ஒரு காட்டை அழிப்பது பற்றிய பற்றிய கதை சொல்லலில் என் மனதைக் கவர்ந்தவர். 

ஒவ்வொரு சிறுகதையும் மிகுந்த கலைநுட்பத்துடன் படைக்கப்பட்டிருப்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பிறகு ஒருவரை ஒருவர் ரசித்துக்கொள்ளும் நண்பர்களாக மாறிய பிறகும் அவரது கருத்துக்களோடு பல நேரங்களில் நான் முரண்பட்டேன். ஆனால் இத்தகைய முரண்பாடுகள் கொண்ட ஒருவர் என்னுடைய மனதை முழுமையாக கொள்ளைகொள்ளும் புனைகதைகளை எப்படி எழுதுகிறார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இயக்குனர் வசந்த் தக்கையின்மீது நான்கு கண்களை ஒரு குறும்படமாக எடுத்தபோது வசனத்தை வெகுவாக பாராட்டினேன். சா கந்தசாமி தனது எழுத்துக்களாலும் வசந்த் எடுத்த அந்த குறும்படத்தின் காரணமாகவும் என்றும் வாழ்வார்.

கவிஞர் கலாப்ரியா

சாயாவனம் சாய்ந்தது.  மூத்த எழுத்தாளரும் , நண்பருமான சா. கந்தசாமி மரணம்.. கசடதபற இதழை நிறுவி நெடுங்காலம் நடத்தி வந்தவர். கடைசியாக அவர் புத்தகம் பேசுது இதழில் எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தும் அவர் வாசிப்பு விசாலத்தைச் சொல்லக்கூடியவை.

எழுத்தாளர் அப்பணசாமி

மரணம் என்பது ஒரு கொடும் ஊழி போன்று சுழன்று, சுழன்று தாக்குகிறது. கடந்த சில மாதங்களாகவே மரணங்களுக்கு அஞ்சலி எழுதுவதில்லை. ஆனால் ஒவ்வொரு இழப்பும் மனதுக்குள் பெரும் துக்கத்தை ஏற்படுத்துகிறது., சமீப காலமாக மரணங்கள் நெருக்கி, நெருக்கி தாக்குகிறது. இது ஏதோ ஒரு கொடுங்காலத்தின் தாக்குதலாகவே தெரிகிறது. தமிழின் முக்கிய எழுத்தாளரும் குடும்ப நண்பருமான சா. கந்தசாமி மறைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

கவிஞர் பழநிபாரதி

தக்கையின் மீது நான்கு கண்கள் ஆழ்ந்த துயிலில்அமைதி கொள்ளட்டும்.

புகைப்படங்கள்: புதுவை இளவேனில்