தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை 

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் : பாதுகாப்பு குழு ஆலோசனை 

webteam

சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 

கடந்த 9 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தை டெல்லியை சேர்ந்த ஹதர்ஷன் சிங் நாக்பால் என்பவர் அனுப்பியிருக்கிறார். அதில், தானும் தனது மகனும் சேர்ந்து வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், “நாங்கள் தடைசெய்யப்பட்ட அதாவது சர்வதேச காலிஸ்தான் ஆதரவு குழுவை சேர்ந்தவர்கள். நாங்கள் ஒரு மாநிலத்தில் இருக்கவில்லை. பல்வேறு மாநிலங்களில் சுற்றித்திரிகிறோம். எனது மொபைல் நெம்பரையும் மாற்றிக்கொண்டே இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி உயர்நீதிமன்ற பதிவாளர் சென்னை காவல்துறை ஆணையருக்கும், மத்திய தொழில் பாதுகாப்புப்படைக்கும் இந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன், காவல்துறை உயர் அதிகாரிகள், சி.ஐ.எஸ்.எஃப் கமாண்டண்ட் ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், நீதிபதிகள் வினீத் கோத்தகரி, மணிக்குமார், சசிதரன், ரவிச்சந்திரபாபு, கிருபாகரன், பி.என். பிரகாஷ் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.