தமிழ்நாடு

திருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு

திருச்சியில் உயிரிழந்த 7 பேர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் - பிரதமர் அறிவிப்பு

rajakannan

திருச்சி முத்தையம்பாளையத்தில் கோயில் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் ‌பதிவிட்டுள்ள பிரதமர், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த அனுதாபங்களை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் கு‌ணம் பெற பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதே போல்,‌ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையி‌ல், ஏழு பேர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவர்களது குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ள முதல்வர், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும், காயம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

முத்தையம்பாளையத்தில் உள்ள வண்டிதுரை கருப்பசாமி கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு விழா நடைபெற்றது. முதல் இரண்டு நாள்கள் குறி சொல்லப்பட்டது. 3ஆம் நாளான இன்று பிடிக்காசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். 

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கந்தாயி, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வள்ளி, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பூங்காவனம், ராசவேல், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமர், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன் ஆகியோர் உயிரிழந்தனர். 

பிடிக்காசு தீரப்போவதாக வதந்தி பரவியதே கூட்ட நெரிசலுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட கோயில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. கோயிலை நிர்வகித்து வந்த தனபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையிடம் அறிக்கை கோரப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.