சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் இரண்டு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரை பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 5 காவலர்களில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைது நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த காவலர் முத்துராஜ், காவல்துறையின் விசாரணை அழைப்பை நிராகரித்து தப்பிச் சென்றதாக கூறப்பட்டது.
சிபிசிஐடி காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வந்த நிலையில், முத்துராஜ் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்தார். இதனிடையே, காவலர் முத்துராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள சிபிசிஐடி, அவரை கைது செய்யும் பணியை முடுக்கியது. இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த முத்துராஜின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனிடையே, தேடப்பட்ட வந்த முத்துராஜ் கைது செய்யப்பட்டார். இதனால், தந்தை - மகன் வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இந்த 5 பேரும் தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழும் என்பதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதில், சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட காவலர்கள் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைச்சாலைக்கு பின்பக்கத்தில் உள்ள அவசர வழியாக உள்ளே அழைத்துச்செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்க்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் என 5 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பின்பக்க வழியாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். டிஎஸ்பி பொன்னரசு மற்றும் காவல் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புடன் பேரூரணி சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டனர்.