சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அருகில் ஏஐ தொழில்நுட்பத்தில் கருணாநிதி அமர்ந்திருப்பதுபோல் திரையில் காட்டப்பட்டது. ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக முன்னாள் முதல்வர் கருணாநிதி உரையாற்றும் காணொலியும் திரையிடப்பட்டது.
விழாவில் அண்ணா, பெரியார், பாவேந்தர், கருணாநிதி, பேராசிரியர், ஸ்டாலின் பெயரிலான விருதுகளை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் மு.க. ஸ்டாலின் விருது முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்திற்கு வழங்கப்பட்டது. விருதினைப் பெற்று ஏற்புரையாற்றிய அவர், “திமுகவின் வெள்ளி விழா, பொன்விழா ஆண்டுகளை தலைவர் கலைஞர் கொண்டாடினார். பவளவிழா ஆண்டை நீங்கள் (மு.க.ஸ்டாலின்) கொண்டாடியுள்ளீர்கள். வைர விழா ஆண்டை கொண்டாடுவதற்கு, எதிர்கால கட்சியை வழிநடத்துவதற்கு நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்.
கலைஞர் மறைவுக்குப் பின், இந்த கட்சி மீண்டும் அரியணை ஏறுமா? இவர் முதல்வர் ஆவாரா என்றெல்லாம் ஊகம் சொல்லினர். கடின உழைப்பால் அனைத்து தேர்தல்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளீர்கள்.
தமிழகத்தை, சட்டப்பேரவைத் தேர்தல் எனும் போர்மேகம் சூழ்ந்துவிட்டது. ஒவ்வொரு நாளும் இனி கணிக்கப்பட வேண்டிய காலம். எனக்கு 9 தேர்தலில் தலைவரும் நீங்களும் வாய்ப்பு கொடுத்தீர்கள். எனக்காக, தேர்தல் பிரச்சாரத்தில் தலைவரோடும், உங்களோடும் சென்றுள்ளேன். உதயநிதியோடும் சென்றுள்ளேன்.
உங்களிடத்தில் பொதுமக்கள் காட்டுகிற அன்பு, கட்சித் தோழர்கள் காட்டுகிற விஸ்வாசம், வேறு எந்த தலைவர்களுக்கும் காட்டுவதில்லை என்பதுதான் உண்மை. யாரை முன்னிலைப் படுத்தினால் பொதுமக்களை கவர முடியுமோ, கழகத் தோழர்களை வெறியோடு கட்சி வேலைகளை செய்யச் சொல்லமுடியுமோ? அவர்களைத்தான் நாம் முன்னிலைப்படுத்த வேண்டும்.
உங்களுக்கும், மேடையில் இருக்கும் தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதலமைச்சராக்க வேண்டாமா? பேராசிரியரை விட பெரிய மனிதர்கள் யாரும் இங்கில்லை. பேராசிரியர் உங்களை எவ்வளவு பெரிய மனதோடு துணை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டார்கள். நாங்கள் ஏற்றுக்கொள்வோம், காலம் தாழ்த்தாதீர்கள்” என தெரிவித்தார்.
எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேச்சை கேட்டு திமுக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.