தமிழ்நாடு

விரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் !

விரைவில் தமிழகத்தில் மின்சார பேருந்துகள் !

webteam

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் மின்சார பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவை கோட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 43 புதிய பேருந்துகளில் கோவை மண்டலத்திற்கு 10 பேருந்துகளும், ஈரோடு மண்டலத்திற்கு 5 பேருந்துகளும், திருப்பூர் மண்டலத்திற்கு 28 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் கோவை மண்டலத்தில் 10 புதிய பேருந்துகள் இயக்க விழா, கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதனை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  “போக்குவரத்து வரலாற்றில் முதல் முறையாக சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டின் சி40 என்ற நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் 80 மின்சார பேருந்துகளும், கோவையில் 20 மின்சார பேருந்துகளும் விரைவில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் இந்த மின்சார பேருந்துகள் வரும்போது செலவீனங்கள் மிகவும் குறையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கோவை கோட்டத்திற்கு இயக்கப்பட்ட புதிய 43 பேருந்துகளின் மதிப்பு ரூ.10.75 கோடியாகும் என அவர் குறிப்பிட்டார். பின் திருச்சி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, திருவண்ணாமலை, சிவகாசி, குமுளி, கும்பகோணம் ஆகிய மாவட்டங்களுக்கு இந்த புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்குமுன் கடந்த ஜூலை மாதம் கோவை கோட்டத்தில் ரூ.43 கோடி மதிப்பில் 172 புதிய பேருந்துகள் துவக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.