தமிழ்நாடு

”ஆய்வு செய்தோம்; தமிழ்நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை” - இந்தியில் பேசிய பீகார் அதிகாரிகள்

”ஆய்வு செய்தோம்; தமிழ்நாட்டில் எந்த பிரச்னையும் இல்லை” - இந்தியில் பேசிய பீகார் அதிகாரிகள்

webteam

தமிழ்நாடு அரசு மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் பணிகள் திருப்திகரமாக உள்ளது, தமிழக அரசுக்கு நன்றி என பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வதந்திகள் பரப்பப்பட்டது. இதனால் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய, பீகார் மாநில அரசு, குழு ஒன்றை தமிழகம் அனுப்பியது. நேற்று சென்னை வந்த பீகார் மாநில குழுவினர், ஆய்வு நடத்துவதற்காக இன்று திருப்பூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக் குமார், சிறப்பு படை பணி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், பீகாரை பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தொழில்துறையினர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், புலம் பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன் கூறுகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்தார். "பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம். இங்கு பல சங்க பிரதிநிதிகள் உடன் பேசினோம், தவறான வீடியோக்களை தமிழகத்தில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் உண்டானது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் மார்ச் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கினார்கள், கட்டுப்பாட்டு அறை துவங்கியது, ஒலி பெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிட்டது, பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்டது. மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார். இந்தியில் தான் இது குறித்து பேசுகிறேன். இதனை ஒளிபரப்பினால் புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சம் நீங்கும்" என தெரிவித்து மேற்குரிய விஷயத்தை இந்தியில் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய் கூறுகையில், டிவிட்டர், யூடியூப், பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்ட மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்கு பதிவு செய்து யூ-டியூப் மற்றும் டிவிட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம். பணம் சம்பாதிக்கவும், பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம். கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விளக்கம் மட்டுமே கேட்டு வருகின்றனர். புகார் இதுவரை பெறப்படவில்லை என கூறினார்.

அதேபோல கோவை மாவட்டத்திலும் புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சமடைய வேண்டாம் என மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கோவை துடியலூர் அடுத்துள்ள ராக்கிபாளையம் நேருநகர் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் பம்ப்செட் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வடஇந்திய தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் கடந்த 2 நாட்களாக சோசியல் மீடியா மூலம் ஏற்படும் அச்சத்தை தவிர்பதற்காக கலந்துரையாடல் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேர்காணல் மூலம், அவர்களுடைய சொந்த மொழியிலேயே பேசி அச்சத்தை போக்கினார்.

கலந்துரையாடல் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர், தமிழகத்தில் குறிப்பாக கோவையில் கடந்த 2 நாட்களாக சோசியல் மீடியாக்கள் மூலம் வதந்திகள் பரப்பப்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக வட இந்தியாவை சேர்ந்த குறிப்பாக பிகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் அச்சப்பட வேண்டாம் என்பது குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடலை நடத்தினோம். அவர்களிடம் பேசும்போது தான் தெரிந்தது அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு குறித்த எந்தவிதமான பயமும், கவலையும் இல்லை என்பது. தமிழகம் பாதுகாப்பானதாக தான் உள்ளது எனக்கூறும் அவர்கள், வழக்கம் போல வேலைக்கும், மார்க்கெட் உள்ளிட்டவைகளுக்கும் சென்று வருவதாக கூறினர். ஆனால் அவர்கள் ஊரிலுள்ள சொந்தகாரர்கள் தான் பயப்படுவதாக கூறினார்கள் என தெரிவித்தார்.

மேலும் அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட பிறகு, அவர்களுடைய குடும்பத்தாருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, அவர்களது சொந்த மொழியிலேயே அவர்களது சொந்தகாரர்களிடம் இங்கு பாதுகாப்பாக உள்ளோம் என்பதை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவிக்குமாறு கூறியுள்ளதாகவும், இதுகுறித்து தமிழக அரசு மற்றும் கோவை மாவட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் உள்ளிட்ட போலீசாரும், 200க்கும் மேற்பட்ட வட இந்திய தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர்.