தமிழ்நாடு

செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் வகுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்த விதிகள் வகுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம்

Veeramani

செல்லப்பிராணிகள் மற்றும் தெரு நாய்கள் வளர்ப்பை முறைப்படுத்துவதற்கான விதிகள் வகுப்பதில், தமிழ்நாடு முன்னோடியாக இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்திலுள்ள நாய்களை முறையாக பராமரிக்க கோரிய வழக்கை பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி அமர்வு விசாரித்தது. அப்போது, ஐஐடி வளாகத்திலிருந்து 22 நாய்கள் மீட்கப்பட்டு, பராமரிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்தது. மேலும், தங்கள் வளாகத்திலுள்ள நாய்கள் முறையாக பராமரிக்கப்படுவதாகக் கூறிய ஐஐடி தரப்பு, இது தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும் என கோரியது.

அதனை ஏற்ற நீதிபதிகள் செல்லப்பிராணிகள், தெருநாய்கள் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பாக விதிகள் வகுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினர். இவ்விசயத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடியாக திகழவேண்டும் என்றும், இது தொடர்பான விதிகளை வகுப்பதற்கான ஆலோசனைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரரான, கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பை நீதிபதிகள் அறிவுறுத்தினர்.