குழந்தைத் திருமணங்கள் முகநூல்
தமிழ்நாடு

தமிழ்நாடு: குழந்தைத் திருமணங்கள் குறித்த பகீர் தகவல்... ஆர்டிஐ சொல்லும் அதிர்ச்சி புள்ளிவிவரம்!

PT WEB

செய்தியாளர்: மருதுபாண்டி

தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் பத்தாயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.

இந்தியாவில், 21 வயது நிறைவடைந்த ஆண்களுக்கும், 18 வயது நிறைவடைந்த மகளிருக்கும் திருமணம் முடிக்க வேண்டும் என்பது சட்டம். மீறினால், குழந்தைத் திருமணங்களாகக் கருதப்படும். சட்டப்படி குற்றமும் கூட. இந்திய அரசின் "குழந்தை திருமண தடைச்சட்டம் 2006" குழந்தை திருமணங்களைத் தடுப்பது மட்டுமின்றி, சிறார்களுக்கு பாதுகாப்பையும் நிவாரணங்களையும் வழங்குகிறது.

குழந்தை திருமணங்களுக்கு உடந்தையாக இருப்போருக்கு அபராதமும் விதிக்கிறது. எனினும், இன்றும் குழந்தைத் திருமணங்கள் தொடரத்தான் செய்கின்றன. இந்நிலையில், புதிய தலைமுறை செய்தியாளர் மருதுபாண்டி, குழந்தைத் திருமணம் குறித்த பல்வேறு கேள்விகளை, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம், சமூக நலத்துறை அதிகாரிகளிடம் முன்வைத்து, பதிலை பெற்றுள்ளார்.

அதில், தமிழ்நாடு முழுவதும் 2020 முதல் 2023 ஆம் ஆண்டு வரை, குழந்தை திருமணங்கள் குறித்து 13,665 புகார்கள் வந்ததாக அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப் பெற்ற புகார்களின் அடிப்படையில், 10,551 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில், குழந்தைத் திருமணங்கள் பற்றி அதிகபட்ச புகார்கள் வந்த மாவட்டங்களின் பட்டியலில், தேனி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் 872 புகார்கள் வந்துள்ளன. 784 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து திண்டுக்கல்லில் 862 புகார்கள் பெறப்பட்டு, 685 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சேலத்தில் 838 புகார்கள் பெறப்பட்டு, 713 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன.

நாமக்கல்லில் பெறப்பட்ட 774 புகார்களில் 425 குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற 632 புகார்களில், 510 குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், 3114 குழந்தை திருமணங்கள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில், நேரில் சென்று ஆய்வு செய்தபோது, அதற்கான எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

வறுமை, விழிப்புணர்வு இன்மை, திருமணத்தின் மூலம் சொந்தங்களை உறுதிப்படுத்துவதாகவும், வயது முதிர்ந்தோரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதாகவும் கருதுவது என்பன உள்ளிட்டவையே, குழந்தைத் திருமணங்களுக்கு காரணம் என்கிறார்கள் சமூக செயல்பட்டாளர்கள்.

குழந்தை திருமணங்களால், பிரசவ மரணங்கள், கருக்கலைப்புகள், ஆரோக்கியமற்ற நிலை உள்ளிட்ட உடல் பிரச்னைகள் ஏற்படும். புரிதலான உறவுகள் இருக்காது, குடும்ப வன்முறைகளும் தற்கொலை முயற்சிகளும் பெருகும், கல்வியறிவற்ற சந்ததிகள் உருவாகும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, குழந்தை திருமணங்கள் குறித்த பகீர் புள்ளிவிவரத்தை, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு.

குழந்தை திருமண தடைச்சட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் முறையாக பின்பற்றவில்லை என்பதுதான் அது. 2021, 2022, 2023 ஆகிய 3 ஆண்டுகளில், தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் குழந்தைத் திருமணங்கள் நடந்ததாக, மத்திய அரசின் அந்த புள்ளிவிவரம் கூறுகிறது.

தமிழ்நாட்டில் 8,966, கர்நாடகாவில் 8,348, மேற்கு வங்கத்தில் 8,324 என, குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையை பட்டியலிடுகிறது அந்த புள்ளிவிவரம்.

தமிழ்நாட்டில், குழந்தை திருமண தடைச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த, 2009 ஆம் ஆண்டு, டிசம்பரில், மாநில விதிகளை பிறப்பித்தது, தமிழ்நாடு அரசு.

மாவட்ட சமூக நல அலுவலரை, குழந்தை திருமண தடுப்பு அதிகாரியாக நியமித்தது. குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தவும், அவற்றை ரத்து செய்யுமாறு நீதிமன்றத்தை நாடவும், பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் இவருக்கு அதிகாரம் உள்ளது. கிராமங்களில் குழந்தை திருமணங்களை தடுக்க, ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைமையிலான மத்திய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.