புதியதலைமுறைக்கு கிடைத்த RTI Data புதிய தலைமுறை
தமிழ்நாடு

நான்கு ஆண்டுகளில் இத்தனை கொலைகளா? கொலை நகராக மாறுகிறதா நெல்லை? RTI-ல் அதிர்ச்சி தகவல்

webteam

செய்தியாளர்: மருதுபாண்டி

திருநெல்வேலி மாவட்டம் 5 நிலப்பரப்புகளை கொண்ட இயற்கை எழில் கொஞ்சும் மிக முக்கியமான மாவட்டமாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் படிப்படியாக முன்னேறி வந்தாலும், நெல்லை மாவட்டத்தில் அரங்கேறும் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது, குறிப்பாக கடந்த இரண்டு தினங்களில் நெல்லை மாநகர் பகுதியில் மட்டும் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொடூரமான முறையில் இரண்டு கொலைகள் அரங்கேறி உள்ளது,

murder

ஆர்டிஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்:

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் ‘கடந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கொலைகள் நடந்துள்ளன? இந்த குற்றச் சம்பவங்கள் தொடர்பாக எத்தனை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்’ உள்ளிட்ட பல்வேறு தகவல்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் புதிய தலைமுறை செய்தியாளர், நெல்லை மாநகர, மாவட்ட காவல்துறைக்கு விண்ணப்பம் செய்திருந்தார். இதையடுத்து அவர்கள் அளித்துள்ள பதில் பல்வேறு அதிர்ச்சிகளை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கொலை சம்பவங்களும், கைது செய்யப்பட்டவர்களும்:

நெல்லை மாநகரில் 58 கொலைகளும், நெல்லை மாவட்டத்தில் (புறநகரில்) 182 கொலைகள் என மொத்தமாக சுமார் 240 கொலைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக ஆணவக் கொலை 1, முன் விரோத கொலைகள் 45, சாதிய கொலைகள் 16 நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் மாவட்ட முழுவதும் கொலை வழக்கில் ஈடுபட்டதாக சுமார் 887 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மாநகர் பகுதியில் 92 பேர்கள், புறநகர் பகுதியில் 243 பேர் என மொத்தம் 335 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதியதலைமுறைக்கு கிடைத்த RTI Data

கொலை சம்பவத்தில் சுமார் 48 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்:

தற்போது வரை நெல்லை புறநகர் பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக ஏழு பேர் மட்டும் தலை மறைவாக இருப்பதாகவும், மாநகரப் பகுதியில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த கொலை சம்பவத்தில் சுமார் 48 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அதிக அளவு புறநகர் பகுதியைச் சேர்ந்த 42 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

புதியதலைமுறைக்கு கிடைத்த RTI Data

பொதுவாக இந்த கொலை சம்பவங்களில் 25 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் ஈடுபடுவதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் காவல்துறை:

முன்விரோத கொலைகளை தடுக்கும் வகையில் கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், அவர்களுக்கு தொடர்புடையவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், குற்ற வழக்குகளில் ஈடுபடுபவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். சாதி ரீதியான கொலையை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nellai Police commissioner office

கொலை குற்றங்களை தடுக்க பொதுமக்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

நெல்லை புறநகர் பகுதியில் உள்ள மாவட்ட காவல்துறை சார்பாக 2015 முதல் 2023 வரை சுமார் 78 சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், மாநகர காவல்துறை சார்பாக சுமார் 45 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரி இடைநிறுத்தல் செய்தவர்கள்தான் அதிக அளவு கொலை சம்பவங்களில் ஈடுபடுவதால், பள்ளி கல்லூரிகளில் இடைநிறுத்தம் செய்த மாணவர்களை கண்காணித்து அவர்கள் படிப்பை தொடர தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.