தமிழ்நாடு

சசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ! ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை

சசிகலாவை சிறையில் சந்தித்த சந்திரலேகா ! ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்த உண்மை

jagadeesh

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா சந்தித்தது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. ஓய்வுப் பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு நெருக்கமானவர் என்பதால் இவர்களது சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இது குறித்து "இந்து தமிழ் திசை" நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி கடந்த மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை சிறையில் சசிகலாவை எத்தனை பார்வையாளர்கள் சந்தித்து பேசினர், எத்தனை மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்தது என தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

அதில், “கடந்த மே முதல் ஆகஸ்ட் வரை சசிகலாவை 36 பார்வையாளர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அதில் அதிகபட்சமாக சசிகலாவின் உறவினரும், அமமுக துணைப் பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் 7 முறை சந்தித்துள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் சசிகலாவின் உறவினர்கள் ராமசந்திரன் 6 முறையும், கமலா 5 முறையும், சிவகுமார் 4 முறையும் சந்தித்து பேசியுள்ளனர். மேலும் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா ஆகஸ்ட் 20-ம் தேதி சசிகலாவை ''நண்பர்'' என்ற உறவு முறையில் சந்தித்துள்ளார். பகல் 1 மணிக்கு தொடங்கிய இந்த சந்திப்பு 1.45 வரை நீடித்துள்ளது '' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நரசிம்ம மூர்த்தி மேலும் தெரிவிக்கையில் '' சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருவதை முன்னாள் டிஐஜி ரூபா அம்பலப்படுத்தியுள்ளார். அதனை விசாரித்த ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமாரும் உறுதி செய்து அறிக்கை அளித்திருக்கிறார். கர்நாடக அரசு அந்த அறிக்கைகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனிடையே நன்னடத்தை விதிகளின் கீழ் தன்னை விடுதலை செய்யுமாறு சசிகலா மனு அளித்திருக்கிறார்" என கூறியுள்ளார்.