ஆர்.எஸ்.பாரதி புதிய தலைமுறை
தமிழ்நாடு

’விஜயகாந்த் கூட்டணி வைத்திருந்தால் கலைஞர் இறந்திருக்க மாட்டார்’ - ஆர்.எஸ்.பாரதி

’2016-ஆம் ஆண்டு விஜயகாந்த், தம்முடன் கூட்டணி வைத்திருந்தால், கலைஞர் ஒரு முதல்வராக இருந்திருப்பார்” என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

Prakash J

திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ”அண்மையில் நடிகர் விஜயகாந்த் மறைந்தார். அன்று காலை 6.30-7 மணிக்கெல்லாம் செய்தி வருகிறது. 7.30 மணிக்கெல்லாம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், யாரையும் கேட்கவில்லை. விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். பிரேமலதாவையும் கேட்கவில்லை; வேறு எவரையும் கேட்கவில்லை. ஆனால், தானாகவே ’அரசு மரியாதை செய்யப்படும்’ என முதல்வர் அறிவித்தார்.

விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் அஞ்சலி

கடந்த 2016-ஆம் ஆண்டு அந்த விஜயகாந்த்திடம் கூட்டணி வைக்க, மிக அழகாகக் கதைகள் சொன்னார், கலைஞர். ’விஜயகாந்த் என்கிற கனி, மரத்தில் இருக்கிறது. நிச்சயமாக, அந்தக் கனி என் மடியில்தான் விழும்’ என்று மிகுந்த உருக்கத்தோடு, பெருந்தன்மையோடு அவருக்கு கலைஞர் அழைப்பு விடுத்தார். ஆனால், அந்த விஜயகாந்த் நம்மோடு கூட்டுச் சேர மறுத்துவிட்டு தனியாக நின்றார்.

இதையும் படிக்க: சுவிட்சர்லாந்து: 15 பேருடன் ரயிலைக் கடத்திய மர்ம நபர்.. 4 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்!

அன்றைக்கு மட்டும் அவர் தனியாக நின்றில்லாமல் நம்முடைய கூட்டணியில் இருந்திருப்பாரானால், கலைஞர் ஒரு முதல்வராக இருந்திருப்பார். இன்னும் சொல்லப்போனால், அவர் மறைந்திருக்கவே மாட்டார். அவருக்கு முதல்வர் பதவி 2016-இல் கிடைத்திருந்தால், அந்த தெம்பிலேயே அவர் வாழ்ந்திருப்பார். இன்னும் ஒருபடி மேலேபோய்ச் சொல்ல வேண்டுமானால், ஜெயலலிதாகூடச் இறந்திருக்க மாட்டார். கலைஞர் முதலமைச்சராக ஆகியிருந்தால், ஜெயலலிதா அந்நேரம் அமெரிக்காவுக்குச் சென்று உடல்நிலையில் கவனம்செலுத்தி அவரும் உயிரோடு இருந்திருப்பார்.

அதேபோல், விஜயகாந்த்தும் இறந்திருக்க மாட்டார். அன்று படுத்தவர்தான், அதற்குப்பிறகு அவர் எழுந்திருக்கவே இல்லை. அவரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து இன்றும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருப்பார். அவர் எவ்வளவு பெரிய துரோகத்தைச் செய்தார். முதலமைச்சராக இருந்து மறைய வேண்டிய கலைஞருக்கு, ஓர் எதிர்க்கட்சித் தலைவராகக்கூட இல்லாத நிலையில் அவரை மறையச் செய்ய காரணமாக இருந்தவர் விஜயகாந்த். இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதைச் செய்தார் என்றால், அதற்குக் காரணம் அந்த வலி அவருக்குத் தெரியும்” என்றார்.