தமிழ்நாடு

ரூ.2.64 கோடி ஹவாலா பணம்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக இதுவரை பிடிபட்ட பணம்!

ரூ.2.64 கோடி ஹவாலா பணம்! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக இதுவரை பிடிபட்ட பணம்!

ச. முத்துகிருஷ்ணன்

உரிய ஆவணங்களின்றி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த மாதத்தில் மட்டும் ரூ.2.64 கோடி ஹவாலா பணங்கள் பிடிபட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்ட வந்த பையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து அவரது பையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது அவரது பையில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து பிடிபட்ட நபரை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (53) என்பதும் அவர் கருவாடு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும், அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது அதில் 78 லட்சம் ரூபாய் பணம் இருந்ததும், பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், பிடிபட்ட நபரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் ஒப்படைக்கவுள்ளனர். ஏற்கனவே இந்த மாதத்தில் மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ. 2,64,19,500, மற்றும் 40 லட்சம் மதிப்புடைய தங்கமும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 90 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில் ரீதியாக பணம் கொண்டு வருபவர்கள் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாத பணம் எவ்வளவு மதிப்பாக இருந்தாலும் அது ஹவாலா பணம் என்ற அடிப்படையிலேயே கருதப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் எனவும் பின் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்புப்படை டி.எஸ்.பி ராஜு தெரிவித்துள்ளார்.