நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2024 - 25
தமிழ்நாடு

வரி முறையில் மாற்றம்: ’ரூ.17,500 மிச்சப்படும்’-நிர்மலா சீதாராமன் கூறியது யாருக்கெல்லாம் பொருந்தும்?

புதிய வரி முறையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 17 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அது எப்படி? யாருக்கு பொருந்தும் என தெரிந்து கொள்ளலாம்.

webteam

புதிய வரி முறையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் 17 ஆயிரத்து 500 ரூபாய் மிச்சப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். அது எப்படி? யாருக்கு பொருந்தும் என தெரிந்து கொள்ளலாம்.

ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரி கிடையாது. 3முதல் 7 லட்சம் ரூபாய் வரை வரி 5 சதவிகிதம் எனக் கணக்கிட்டால், 20 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், 87யு பிரிவின்படி ரிபேட் எனப்படும் வரிச்சலுகை 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதனால், 7 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களும் கணக்கு தாக்கல் செய்யும்போது வரி செலுத்த வேண்டியிருக்காது.

நிர்மலா சீதாராமன்

மேலும், STANDARD DEDUCTION எனப்படும் நிலையான கழிவு 50 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதால், புதிய முறையில் வரிக்கணக்கு தாக்கல் செய்பவர்கள் 7 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வரி செலுத்த வேண்டியிருக்காது. ஆனால், ஆண்டு வருமானம் 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் உள்ளவர்கள் செலுத்த வேண்டிய வரியில் மத்திய நிதியமைச்சர் கூறிய 17 ஆயிரத்து 500 ரூபாய் மீதமாகும்.

எப்படியென்றால், அறிவிப்புக்கு முன்னும் பின்னும் கணக்கிட்டு பார்த்தால் 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை 5 சதவிகித வரி, இதில் மாற்றமில்லை. ஆனால், 6 முதல் 7 லட்சம் ரூபாய் வருமானத்தில் முன்பு 10 சதவிகிதம், தற்போது 5 சதவிகிதம் என்பதால் 5ஆயிரம் ரூபாய் மீதமாகும். அதேபோல, 9முதல் 10 லட்சம் ரூபாய் வரை முன்பு 15 சதவிகித வரி, தற்போது அறிவிக்கப்பட்ட மாற்றங்களில் 10 சதவிகிதமாக குறைப்பு.

income tax

எனவே இதிலும், 5 ஆயிரம் ரூபாய் வரிகுறையும். எனவே, இந்த இரு பிரிவுகளில் 10 ஆயிரம் ரூபாயும், நிலையான கழிவு உயர்த்தப்பட்டிருப்பதால் 30 சதவிகித வரி பிரிவில் 7 ஆயிரத்து 500 ரூபாய் மீதமாகும். இதிலும், வரி குறையும்போது சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியிலும் கூடுதலாக சிறு தொகை குறையும்.