தமிழ்நாடு

சேலம் மருத்துவமனையில் கொசுப்புழுக்கள், பாம்பு: ரூ.10 லட்சம் அபராதம்

சேலம் மருத்துவமனையில் கொசுப்புழுக்கள், பாம்பு: ரூ.10 லட்சம் அபராதம்

webteam

சேலத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதிக டெங்கு கொசுப் புழுக்கள் உற்பத்தியாகும் அளவு சீர்கேட்டுடன் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனைக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் இயங்கி வரும் சண்முகா மருத்துவமனையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி அதில் ஏராளாமான கொசுப்புழுக்கள் இருப்பதை கண்ட அதிகாரிகள், மருத்துவமனைக்கு இரண்டு லட்சம் ருபாய் அபராதம் விதித்தனர். அப்போது மருத்துவமனை நிர்வாகத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவமனைக்கு உள்ளே சென்று ஆய்வு நடத்தவிடாமல் தடுத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ், மருத்துவமனையில் தொடர்ந்து ஆய்வு நடத்தினார். அப்போது தொட்டி ஒன்றில் ஒரு பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அபாயகரமான மருத்துவ கழிவுகளும் மருத்துவமனையில் அகற்றப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்க தவறிய காரணத்திற்காக ஐந்து லட்சம் ரூபாயும், மருத்துவ கழிவுகளை அகற்றாத காரணத்திற்காக ஐந்து லட்சம் ரூபாயும் என மொத்தமாக பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் உத்தரவிட்டார்.