தமிழ்நாடு

சாலையில் கண்டெடுத்த ரூ.1.5 லட்சம் பணம்... காவலரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் !

சாலையில் கண்டெடுத்த ரூ.1.5 லட்சம் பணம்... காவலரிடம் ஒப்படைத்த இளைஞர்கள் !

webteam

சாலையில் கண்டெடுத்த 1.50 லட்சம் ரூபாயை போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்களை பாராட்டி பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

அவிநாசியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வசூலராக இருப்பவர் முருகேசன் மற்றும் பழனியப்பன். சிவகங்கை மாவட்டம் இரணிப்பட்டி பகுதியை சேர்ந்த முருகேசனும், அதேபோல் வெள்ளியங்குடிபட்டி பகுதியை சேர்ந்த பழனியப்பன் இருவரும் வழக்கம் போல நேற்று வசூலுக்காக சென்றுள்ளனர். அப்போது அவிநாசியிலிருந்து கோயில்பாளையம் நோக்கி பைக்கில் செல்லும் போது, கருவலூர் அருகே சாலையில் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் கிடப்பதை கண்டுள்ளனர்.

அதை எடுத்துக் கொண்டு தங்களது பணி முடிந்த பிறகு நேற்று மாலை அவிநாசி காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்துள்ளனர். இதையடுத்து போலீசார் பணத்தை தொலைத்தவர்கள் வந்து உரிய ஆதாரத்துடன் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்திருந்தனர். 

இந்நிலையில் அவிநாசியை அடுத்து கருவலூர் பகுதியை சேர்ந்த ஆட்டு கறி கடை உரிமையாளர் ரங்கராசன் தான் ஆடு விற்று பெற்ற பணம் தான் அது என உரிய ஆதாரத்துடன் அவிநாசி காவல் நிலையத்தில் வந்து தனது பணத்தை கோரினார். விசாரணை கொண்ட போலீசார் மீட்கப்பட்ட பணம் ரங்கராசனுடயது என்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து சேயூர் காவல் நிலையத்தில் வைத்து பணத்தை கண்டெடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த முருகேசன் மற்றும் பழனியப்பன் முன்னிலையில் அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளர் பரமசாமி ரங்கராசனிடம் பணத்தை ஒப்படைத்தார். மேலும் கண்டெடுத்த பணத்தை பெருந்தன்மையோடு போலீசாரிடம் ஒப்படைத்த இருவரைம் பரமசாமி பாராட்டினார்.