தமிழ்நாடு

கஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்

கஜா புயலுக்கு ரூ.1,146.12 கோடி மத்திய அரசு நிவாரணம்

webteam

கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1,146.12 கோடியை ஒதுக்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. ஆடு, மாடுகள் உயிரிழந்ததோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கிய முந்திரி, தென்னை, வாழை மரங்கள் வேராடு வேராக சாய்ந்தன. இதனால் மக்கள் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவித்தனர்.

புயல் பாதித்த பகுதிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அத்துடன் மத்தியக் குழுவும் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இதுகுறித்த ஆய்வறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வழங்கியது.

இதனிடையே கஜா புயல் நிவாரணமாக ரூ.15,000 கோடி வழங்க வேண்டும் என்றும் இடைக்கால நிவாரணமாக 1500 கோடி ரூபாய் வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் கஜா புயல் நிவாரணமாக முதற்கட்டமாக 353 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது. முழு ஆய்வறிக்கை வந்ததும் முழு நிவாரணம் குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேபோல பொதுமக்களிடமிருந்தும், பொது நிவாரண நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதுவரை ஆன்லைன் மூலமும் நேரிலும், முதல்வர் புயல் நிவாரண நிதிக்கு ரூ.127.22 கோடி பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் இன்று உயர்நிலைக்கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி, விவசாயத்துறை அமைச்சர் ராஜா மோகன் சிங், நீட்டி ஆயோக்கின் தலைவர் ராஜீவ் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். 

அதில், கஜா புயல் நிவாரணத்துக்கு ரூ.1,146.12 கோடியை ஒதுக்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்நிலைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு இடைக்கால நிவாரணமாக தமிழக அரசு என்ன நிவாரணம் கேட்டிருந்ததோ அதைத்தான் தற்போது வழங்கியுள்ளது. இந்தத் தொகை தமிழக அரசு கேட்ட தொகையில் 10 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.