அத்திவரதரைக் காண பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அலைமோதும் நிலையில், ரவுடி ஒருவர் தனது சகாக்களுடன் சகல மரியாதையாக விஐபி தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 6 மணி நேரம் வரை காத்திருந்தால் மட்டுமே பக்தர்களால் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிகிறது. இதனால் குழந்தைகளை வைத்திருப்பவர்கள், மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில் மதுரையை சேர்ந்த ரவுடி ஒருவர் தனது சகாக்களுடன், விஐபி தரிசனத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தரிசனத்திற்கு சிரமப்படும் நிலையில், ரவுடி வரிச்சியூர் செல்வம் தனது சகாக்களுடன், சகல மரியாதையாக தரிசனம் செய்துள்ளார். அங்குள்ள பட்டாச்சாரியார்கள் அத்திவரதர் முன் ரவுடியை உட்கார வைத்து சிறப்பு மரியாதையும் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கோயிலுக்கு செல்லும் பலரின் மத்தியில் விவாதப் பொருளாக உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இந்தச் சம்பவம் குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, வரிச்சியூர் செல்வம் விஐபி தரிசனம் செய்வது போன்ற வீடியோக்கள் என் கவனத்திற்கும் வந்தன. வரிச்சியூர் செல்வத்தை யார் அழைத்து வருகிறார்கள் என்பதை அறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் திமுக பிரமுகர்கள் வரிச்சியூர் செல்வத்தை அழைத்து வருகின்றனர். உரிய அனுமதிச் சீட்டு இல்லாமல் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.