திருவேங்கடம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆம்ஸ்ட்ராங்கை பின்புறமாக வெட்டிய முக்கிய குற்றவாளி போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை! நடந்ததுஎன்ன?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்ற நபர் காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஜெனிட்டா ரோஸ்லின்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடம் என்ற நபர் காவல்துறையின் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ஆம் தேதி சென்னை பெரம்பூர் பகுதியில் தனது வீடு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், கைது செய்யப்பட்டுள்ள 11 பேரையும், , 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த 11 பேரில் திருவேங்கடமும் ஒருவர்.

இந்தவகையில், போலீசார் இவரிடம் விசாரணை நடத்த இன்று காலை 5.30 மணி அளவில் மாதவரம் ஏரிக்கரை அருகே அழைத்து சென்றுள்ளனர். அப்போது, புழல் அருகே இருக்க கூடிய வெஜிட்டேரியன் வில்லேஜ் என்ற பகுதியை அடைந்தவுடன் தப்பிச்செல்ல முயன்றுள்ளார் திருவேங்கடம். தப்பி செல்ல முயன்ற திருவேங்கடத்தை கொடுங்கையூர் காவல் ஆய்வாளர் சரவணன் இரண்டு முறை சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்கவுண்டர் செய்யப்பட்டதில், திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கையில், திருவேங்கடம் புழல் பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனால், ஆயுதங்களை பறிமுதல் செய்ய சென்ற போது திடீரென அங்கே பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காவல்துறையினர் நோக்கி சுட்டதாகவும், தற்காப்புக்காக காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கி உட்பட சில ஆயுதங்களை போலீசார் அவரிடமிருந்து பறிமுதல் செய்தள்ளனர் .ஏற்கெனவே இவருக்கு போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். என்கவுண்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் மீது ஆம்ஸ்டிராங்கின் வலதுகரமாக இருந்த தென்னரசுவை கொலை செய்த வழக்கு உட்பட 3 கொலை வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆம்ஸ்ட்ராங்கை பின்புறமாக முதல் வெட்டு வெட்டியவர் திருவேங்கடம். இந்நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.