உயிரிழந்த இர்ஃபான் pt web
தமிழ்நாடு

திண்டுக்கல்| ரவுடி ஒருவர் கொடூர கொலை.. 4 நாட்களில் 3 கொலைகள்.. மக்கள் அச்சம்

திண்டுக்கல்லில் ரவுடி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

திண்டுக்கல் - பேகம்பூரைச் சேர்ந்தவர் இர்ஃபான். இவர் மீது கொலை உள்ளிட்ட 20க்கும் அதிகமான வழக்குகள் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், இர்ஃபான், தனது நண்பர் முகமது அப்துல்லாவுடன் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள ஸ்பென்சர் காம்பவுண்டிற்கு வந்துள்ளார். அப்போது பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத கும்பல், இருவரையும் சரமாரி வெட்டியுள்ளனர். முகம் சிதைக்கப்பட்ட இர்ஃபான் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயங்களுடன் அங்கிருந்து தப்பியோடிய முகமது அப்துல்லா, திண்டுக்கல் நகர வடக்கு காவல்துறையினரால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொல்லப்பட்ட இர்ஃபானின் உடலை மீட்ட காவல்துறையினர், கூராய்வுக்காக அனுப்பிவைத்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2 நாள்களுக்கு முன்பு வடமதுரை - காப்பிளிப்பட்டியில் ஹேம தயாள வர்மன் என்பவரும், வேடசந்தூர் பகுதியில் திமுக பிரமுகர் மாசி பெரியண்ணாவும் வெட்டிக் கொல்லப்பட்டனர். நான்கு நாட்களில் 3 கொலைகள் நிகழ்ந்திருப்பது திண்டுக்கல் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.