உயிரிழந்த ரவுடி துரை pt web
தமிழ்நாடு

ரவுடி துரை திட்டமிட்டு சுடப்பட்டாரா? காட்டில் கிடைத்த கத்தி, துப்பாக்கி! இன்னொருவரையும் காணவில்லையா?

PT WEB

ரவுடி துரை

நான்கு கொலை வழக்குகள் உள்ளிட்ட 70க்கும் அதிக வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான ரவுடி துரைசாமி, புதுக்கோட்டை திருவரங்குளம் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, ஆலங்குடி காவல்துறையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிக்க முயன்ற துரையை, காவல் ஆய்வாளர் முத்தையன் துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு எச்சரித்ததாக தெரிகிறது. இருப்பினும் துரை, காவல்துறையினரை பட்டா கத்தியால் தாக்கி தப்பிக்க முயன்றதால், அவரை நோக்கி சுட்டதில், 2 குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் போது ரவுடி துரை பட்டா கத்தியால் வெட்டியதில் ஆலங்குடி துணை காவல் ஆய்வாளர் மகாலிங்கம் கையில் காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் பட்டாக்கத்தி, நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் குண்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதனிடையே, துரைசாமியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு, திருச்சி சரக டிஐஜி மனோகரன் சென்றார். என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக காவல்துறையிடமிருந்து உரிய அறிக்கை தரப்படும் எனத் தெரிவித்தார்.

உடன் சென்ற ஒருவரைக் காணவில்லை

அவரது சடலம் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு குவிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள், திட்டமிட்டு துரையை போலீசார் கொலை செய்து விட்டதாகவும் இதற்கு உரிய நீதி விசாரணை வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி அவருடன் சென்ற வெள்ளைச்சாமி என்ற பிரதீப்பின் நிலையும் என்னவென்று தெரியவில்லை எனக் கூறியும் பிரேத பரிசோதனை கூடவளாகத்தில் போலீசாரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மருத்துவக் கல்லூரிக்கு வெளியே அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அப்போது துரையின் உறவினர்கள் போலீசாரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் அழைத்துச் சென்ற வெள்ளைச்சாமியையும் உடனடியாக கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து போலீசாரின் சமரச பேச்சு வார்த்தைக்கு பின்பு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

சுடப்பட்ட இடத்தில் கிடைத்த ஆயுதங்கள்

இது ஒருபுறம் நடக்க, துரை சுடட்பட்ட வம்பன் காட்டுப்பகுதியில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜூலியர் சீசர் பார்வையிட்டார். மோப்பநாய் கொண்டுவரப்பட்டு சோதனை சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்களும் அந்த இடத்தில் ஆய்வு செய்தனர். இந்த சோதனையில், பட்டாக்கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் திறந்த நிலையில் மது பாட்டில் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ரவுடி துரை என்கவுண்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை கோர உள்ளோம் என அவரது தரப்பு வழக்கறிஞர் பிரபாகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கோயம்புத்தூர் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நிபந்தனை ஜாமீனுக்காக கையெழுத்திட சென்ற துரையை போலீசார் வழியில் மறித்து அடித்து புதுக்கோட்டைக்கு கொண்டு வந்து என்கவுண்டர் செய்துள்ளனர்.

முழுக்க முழுக்க மனித உரிமை மீறல்

அவரைப் மூன்று கார்களில் சீருடை இல்லாமல் சென்ற போலீசார் வழிமறித்து தாக்கி தூக்கிச் சென்ற காட்சிகள் எங்களிடம் உள்ளது. இந்த சம்பவத்தில் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இது குறித்த தகவல்களை நாங்கள் மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பி உள்ளோம்.

சிபிசிஐடி விசாரணை கோர உள்ளோம், சிபிசிஐடி போலீசார் இந்த பலத்தை விசாரிக்க கேட்க உள்ளோம். இவருடன் சென்ற முக்கிய சாட்சியான இவரது அக்கா மகன் வெள்ளைச்சாமியை போலீசார் பிடித்து தற்போது துவாக்குடி காவல் நிலையத்தில் வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. அவர் மீது எந்த வழக்குகளும் இல்லை அவர் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது அவரை ஏன் போலீசார் கைது செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது” என்றும் ரவுடி துரையின் வழக்கறிஞர் பிரபாகரன் கூறியுள்ளார்.

இது குறித்து முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், “ எந்த என் கவுன்ட்டரையும் ஏற்க கூடாது. அதுவும் ஜனநாயக நாட்டில் இது அப்பட்டமான மனித உரிமை மீறல். என்கவுன் ட்டருக்கு ஆளான நபரை நான் ஆதரிக்கவில்லை. அவரது குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

என் கவுன் ட்டர் குறித்த விவகாரங்கள் கடுமையான கருத்துக்களை பதிவு செய்த உச்சநீதிமன்றம் இது தொடர்பாக வழக்குகளை பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. சமீபத்தில் தெலங்கனாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்த போது நீதியரசர் சிர்புர்கார் கமிஷன் போட்டார்கள். மக்கள் அந்த என் கவுன் ட்டரை கொண்டாடியது அவர் தவறு என்று சொன்னார்”