தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்.
சென்னை பூந்தமல்லி அடுத்த மலையம்பாக்கத்தில் கடந்த 6-ம் தேதி இரவு ரவுடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட 76 ரவுடிகளை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அப்போது பினு உள்ளிட்ட சுமார் 25 பேர் தப்பியோடிவிட்டனர். தப்பிய பினுவை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட பினுவின் குடும்பம், பல ஆண்டுகளுக்கு முன்பே சென்னை சூளைமேட்டில் குடியேறிவிட்டது. இவர் மீது 3 கொலை வழக்குகளும், கொலை மிரட்டல், கொலை முயற்சி என 12 வழக்குகளும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்தன. 1998ல் தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரை, கொலை மிரட்டல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருக்கிறார் பினு.
கைப்பேசி பயன்படுத்தும் பழக்கம் இல்லாத பினுவை, தொழில்நுட்ப ரீதியில் நெருங்குவது காவல்துறைக்கு சவாலாகவே இருந்தது. இருப்பினும் 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தமிழகம் முழுவதும் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் பினுவை சுட்டுப் பிடிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ரவுடி பினு இன்று சரண் அடைந்துள்ளளார். அம்பத்தூர் காவல் துணை ஆணையர் முன்னிலையில் இன்று காலை பினு சரணடைந்திருக்கிறார். துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டதால் உயிருக்கு பயந்து பினு சரண் அடைந்துள்ளார்.