பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்துவந்த, முன்னாள் பாஜக நிர்வாகியான அஞ்சலை நேற்று கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக இவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் லட்சக்கணக்கில் பணம் கொடுத்ததை அடுத்து, தற்போது அவரது இரண்டு வங்கிக் கணக்குகளை காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேபோல் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் ரவுடி நாகேந்திரனுக்கு பாதுகாப்பு கேட்டு, மனித உரிமைகள் ஆணையத்தில் அவரது மனைவி விசாலாட்சி மனு அளித்துள்ளார்.
குறிப்பாக தன்னுடைய கணவர் 22 ஆண்டுகளாக ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தன்னுடைய கணவரது பெயரும் இடம்பெற்று சமூக வலைதளங்களில் பரவி வருவதால் என்னுடைய கணவரது உயிருக்கும் ஆபத்து இருக்கிறது. காவல்துறையினர் திருவேங்கடத்தை என்கவுண்டர் செய்ததுபோல் எனது கணவரையும் என்கவுண்டர் செய்ய திட்டமிட்டுள்ளதாக நாகேந்திரனின் மனைவி தனது மனுவில் தெரிவித்துள்ளார். அதேவேளையில் காவல்துறையினர், இந்த ஆம்ஸ்ட்ராங் கொலைச் சம்பவத்தில் நாகேந்திரனுக்கு தொடர்பு உள்ளதா என்கிற ரீதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.