boat pt desk
தமிழ்நாடு

ராமநாதபுரம்: ஒரு கி.மீ தூரம் வரை உள்வாங்கிய கடல் - தரைதட்டி நின்ற படகுகளால் மீனவர்கள் அவதி

webteam

ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை கடலோரப் பகுதிகளான தொண்டி, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால், 500-க்கும் மேற்பட்ட படகுகள் தரைதட்டி நின்றன. அவற்றை கரைக்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் அவதி அடைந்தனர்.

boat

காற்றின் சுழற்சி காரணமாக செப்டம்பர் முதல் டிசம்பர் மாதம் வரை, காலை நேரத்தில் கடல் உள்வாங்குவதும் மாலையில் கடல் நீர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக உள்ளது என மீனவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை தொண்டி, மோர்பண்ணை, திருப்பாலைக்குடி, தேவிபட்டினம் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியது. இதனால், மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் தங்கள் படகுகளை கரைக்கு கொண்டு வர முடியாமல் அவதியடைந்தனர்.

சுனாமிக்கு பின்பு பருவநிலை மாற்றத்தால் அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீரோட்டம் மாறுவது, கடல் சீற்றம், காற்றின் வேகம் அதிகரிப்பது உள்ளிட்டவை நிகழ்ந்து வருவதாக மீனவர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதுகுறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மீனவ சங்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர்.