பிரசித்தி பெற்ற கரூர் பூலாம் வலசு சேவல் சண்டை நிறைவு பெற்றது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நாட்கள், கூடுதல் சேவல்கள் என சேவல் சண்டை களைகட்டியிருந்தது.
மூன்று ஆண்டுகள் தடைக்குப் பிறகு கடந்த ஆண்டிலிருந்துதான் பூலாம் வலசில் பாரம்பரிய சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சிக்குப்பிறகு சேவல் சண்டையை கடந்த ஆண்டு முதல் பழைய எழுச்சியுடன் நடத்தி வருகிறது பூலாம் வலசு கிராமம். 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட இந்த சேவல் சண்டையையொட்டி பூலாம் வலசு பொதுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிந்தது. 15க்கும் மேற்பட்ட களங்கள் அமைக்கப்பட்டு அங்கு சேவல்கள் மோதவிடப்பட்டன.
நீதிமன்ற உத்தரவு பெற்று, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு நடத்தப்படும் இந்த சேவல் சண்டையிலும், ஜல்லிக்கட்டைப் போலவே உடற்தகுதி பரிசோதனைகளுக்குப்பிறகே அனுமதி வழங்கப்பட்டது. நான்கு நாட்களும் காலை 10 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணிவரை சேவல்சண்டை நடத்தப்பட்டது.
இருசேவல்கள் மோதவிடப்படும்போது கடைசிவரை நின்று சண்டையிடும் சேவல் வென்றதாக அறிவிக்கப்படும். தோற்ற சேவல், வெற்றி பெற்றவரின் வசமாகிவிடும் என்பதைத்தவிர பரிசுகள் எதுவும் இல்லை. அதேபோல, வெற்றி பெற்ற சேவலை பத்தாயிரம் ரூபாய் வரை விலைகொடுத்து வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர்.
திருப்பூர், ஈரோடு, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல் என அண்டை மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளா, மகாராஷ்ட்ர மாநில சேவல்களும் இந்த ஆண்டு சேவல் சண்டையில் கலந்து கொண்டன. கடந்த ஆண்டு 20 ஆயிரம் சேவல்கள் பங்கேற்ற நிலையில், இந்த ஆண்டு 25 ஆயிரத்திற்கும் அதிகமான சேவல்கள் கலந்து கொண்டன.