தமிழ்நாடு

“பகலில் கல் குவாரி ஊழியர்கள், இரவில் கொள்ளை கும்பல்” - பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேர்

“பகலில் கல் குவாரி ஊழியர்கள், இரவில் கொள்ளை கும்பல்” - பயங்கர ஆயுதங்களுடன் சிக்கிய 6 பேர்

webteam

கோவையில் கல் குவாரி ஊழியர்கள்போல நடித்து இரவில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள நஞ்சுண்டாபுரம் செக்போஸ்ட் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரில் கத்தி, அரிவாள் என ஆபத்தான ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரிடம் சிக்கினர். அவர்களை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்ததில், மதுரையைச் சேர்ந்த பழைய குற்றவாளிகள் என கூறினர்.

5 பேர் மதுரையைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் தஞ்சாவூரைச் சேர்ந்தவர் என்பதும், அவர்கள் மீது வழிப்பறி மற்றும் கொலை வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இந்த கும்பல் கடந்த ஒன்றரை மாதமாக கோவையில் பதுங்கியிருந்து கிணத்துக்கடவு அருகே உள்ள கல் குவாரியில் வேலை செய்வதுபோல் நடித்து வந்துள்ளனர்.

அதேசமயம் இரவு நேரங்களில் வாகனத்தில் செல்பவர்களை வழிமறித்து கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதற்கிடையே கோவையில் உள்ள மிகப்பெரிய நகை கடைகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளனர். தற்போது சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு செல்லும்போது போலீசாரின் சோதனையில் மாட்டிக்கொண்டனர். 6 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.