தமிழ்நாடு

திருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..!

திருமணத்திற்காக பெண் பார்க்க போனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி... 3 பேர் கைது..!

Rasus

திருமண வரனுக்காக இணையத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு வந்த அழைப்பை நம்பி பெண் பார்க்க போனவரிடம் இருந்து செல்போன் , பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியைச் சேர்ந்தவர் காளிசரண். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர் 2 வருடங்களாக தன் திருமணத்துக்காக பெண் பார்த்து வந்துள்ளார். இதற்காக அவர் சில புகழ்பெற்ற திருமண வரன் பார்ப்பவர்களுக்கான இணையதளத்திலும் அவர் குறித்த தகவல்களை பதிவு செய்து வைத்துள்ளார். அவர் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய பெண் ஒருவர் தன் பெயர் பிரியா ஐயர் என்றும், தான் பெங்களூரு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாம் நேரில் சந்திக்கலாம் என்றும் கூறிய அவர், குறிப்பிட்ட நாள் ஒன்றில் இரவு சங்கம் தியேட்டரில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் அழைத்த அவர் வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் சந்திக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கும் சந்திக்காமல் பொன்னம்மாள் தெருவில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுசில் சந்திக்கலாம் என்று இடத்தை மாற்றி தெரிவித்துள்ளார். இதனை நம்பி அங்கு சென்ற  காளிசரணிடம் புடவை அணிந்திருந்த பெண் ஒருவர் பிரியா ஐயர் என்று அறிமுகம் ஆகியுள்ளார். அவருடன் சேர்த்து 3 ஆண்களும் இருந்து உள்ளனர். அவர்களை பிரியாவின் உறவினர்கள் என நம்பிய காளிசரணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 

திடீரென்று கத்தியை எடுத்து மிரட்டிய அந்த கும்பல்  காளிசரணின் செல்போன் மற்றும் அவர் அணிந்திருந்த தங்கச்செயின் ஆகியவற்றை பிடுங்கியுள்ளனர். மேலும் அவரது ஏடிஎம் கார்டையும் பிடுங்கி ரகசிய நம்பரையும் வாங்கி சென்றுள்ளனர்.  காளிசரணை புகைப்படம் எடுத்துக்கொண்ட அந்த கும்பல் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் புகைப்படத்தை தவறாக பயன்படுத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டது குறித்து  காளிசரண், வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை ஏமாற்றியவர்கள் தோற்றத்தில் வட இந்தியர்கள் போல இருந்ததாகவும் அவர் அடையாளம் தெரிவித்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காளிசரணை ஏமாற்றி பணம் பறித்த பறித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர் கொச்சியை சேர்ந்த சாவித்திரி (52), கோடம்பாக்கம் சிவா, மாதவரம் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளள நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.