ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலில் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் மக்கள்நலக் கூட்டணி திணறி வருகிறது.
ஆர்கே நகர் தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் முடிவடைய இன்னும் 6 நாட்கள் உள்ள நிலையில், மக்கள்நலக் கூட்டணியால் இதுவரை எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை. அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான டிடிவி தினகரன் தம்மை ஆதரிக்க வேண்டும் என்று நேரடியாக அழைப்பு விடுத்தார். அதேபோல், திமுக செயல் தலைவர், மு.க.ஸ்டாலினும் மக்கள்நலக் கூட்டணியினர், இடைத்தேர்தலில் திமுகவை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்தச் சூழலில், மக்கள்நலக் கூட்டணியினர் இரண்டுமுறை கூடி ஆலோசனை நடத்தியபின்னரும் இதுவரை உறுதியான முடிவெடுக்கப்படவில்லை. திமுகவுக்கு ஆதரவளிப்பது என விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், தேர்தலில் போட்டியிடுவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விரும்புவதால் இந்த இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. கூட்டணியினரிடையே வேறுபட்ட நிலைப்பாட்டால் மக்கள்நலக் கூட்டணியால் இதுவரை எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. இந்த சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு நேற்று நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.