தமிழ்நாடு

அரசியலில் குதிக்கிறாரா ஆர்.ஜெ.பாலாஜி? பரவி வரும் சுவர் ஓவியம்!

அரசியலில் குதிக்கிறாரா ஆர்.ஜெ.பாலாஜி? பரவி வரும் சுவர் ஓவியம்!

webteam

மே 18 ஆம் தேதி ஆர்.ஜெ.பாலாஜியின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம் என அவரது ஆதரவாளர்களால் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த தினத்தன்று ஆர்.ஜெ.பாலாஜியின் அரசியல் அறிவிப்புக்காக காத்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் சில சுவரில் ஓவியங்களை வரைந்துள்ளனர். அதில் ‘இளைஞர்களை வழிநடத்த, தமிழகத்தில் மாற்றம் காண அரசியல் களம் புகும் ஆர்.ஜெ.பாலாஜி அவர்களை வரவேற்கிறோம்’ என எழுதப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்தபோது இளைஞர்கள் பலரும் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். அப்போது விஷால் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் குழுவாக சேர்ந்து மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். இதேபொன்று வெள்ளத்தின் போது நடிகர் ஆர்.ஜே.பாலாஜியும் பல உதவிகளை செய்தார். இதனால் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு கிடைத்தது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தமிழக இளைஞர்கள் நடத்திய போராட்டத்தை உலகமே அறியும். இந்த போராட்டத்திற்கு நடிகர் ராகவா லாரான்ஸ் உள்ளிட்ட பலர் ஆதரவளித்தனர். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி மெரினா போராட்டக்களத்தில் பங்கேற்றனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மத்தியில் பேசிய பாலாஜி, ‘அனைத்து பிரச்னைக்கும் இதேபோன்ற ஒருமித்த குரலுடன் இணைந்து போராட வேண்டும்’ என்று ஆவேசமாக பேசினார். 

அண்மையில் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. அப்போது சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்தக்கூடாது என சில அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அன்றைய தினம் சென்னை அணி விளையாடும் போட்டியை, தொலைக்காட்சியில் தொகுத்து வழங்க முடியாது என பாலாஜி குரல் கொடுத்தார். இவ்வாறு தொடர்ந்து பல சமூகப் பிரச்னைகளுக்கு அவர் குரல் கொடுத்து வருகிறார். 

இந்நிலையில் தான் ஆர்.ஜே.பாலாஜியின் அரசியல் வருகை என சுவர் ஓவியங்கள் பரவி வருகின்றன. அந்த சுவர் ஓவியத்தில் சிவப்பு, கருப்பு, பச்சை நிறத்தில் ஆன கொடியும், அதைசுற்றி மஞ்சள் நிறமும் நிரப்பப்பட்டுள்ளது. கொடியின் மையத்தில் பசுவின் படம் இடம்பெற்றுள்ளது.

இருப்பினும் இந்த சுவர் ஓவியம் எந்த இடத்தில் வரையப்பட்டுள்ளது என்ற தகவல்கள் இல்லை. இதுதொடர்பாக ஆர்.ஜே பாலாஜியை தொடர்பு கொண்டு கேட்க முயன்றபோது அவரது போன் சுவிட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.