தமிழ்நாடு

தண்ணீர் பிரச்னைக்கு நதிகள் இணைப்பு ஒன்றே தீர்வு: பிரேமலதா விஜயகாந்த்

தண்ணீர் பிரச்னைக்கு நதிகள் இணைப்பு ஒன்றே தீர்வு: பிரேமலதா விஜயகாந்த்

kaleelrahman

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு அதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், யார் எதிர்த்தாலும் மேகதாதுவில் அணை கட்டுவதில் எந்த மாற்றமும் இல்லை, இதை கட்டியே தீருவோம் என அம்மாநில முதல்வர் உட்பட அனைத்துக் கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கோடைகாலம் துவங்கினால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்படும். எனவே இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை கர்நாடகாவில் இருந்து முழுமையாக பெற்றுத்தர வேண்டும் என்றும் கர்நாடகா, மேகதாதுவில் அணை கட்டுவதை முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்தக்கோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்றனர். கர்நாடக மாநில அரசின் அணை கட்டும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கர்நாடக மாநில அரசை எதிர்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன அதேபோல அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "மத்தியிலும், கர்நாடக மாநிலத்திலும் ஆட்சி செய்துவரும் பாஜகவின் அரசு, தமிழகத்திற்கு விரோதமாக ‘அணை கட்டியே தீருவோம்‘ என்ற முடிவை வன்மையாக கண்டிக்கிறோம். இரு மாநிலத்தவரும் சகோதரத்துவத்துடன் பழகிவரும் நிலையில் பிடிவாத போக்கை கர்நாடக அரசு கைவிட வேண்டும். இல்லை என்றால் தமிழக மக்களின் எதிர்ப்புக்கு கர்நாடக மாநிலம் ஆளாக நேரிடும்" என எச்சரிக்கை விடுத்தார்.

"தண்ணீர் பிரச்னை தீராத பிரச்னையாகியுள்ளது. தீர்வு பெற்று முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால் நதிகள் இணைப்பு ஒன்றுதான் சாத்தியம். இப்போது எப்படி தேசிய நெடுஞ்சாலை போட்டு, இந்தியா முழுவதையும் ஒன்றாக இணைத்து இருக்கிறார்களா அதுபோல மத்திய அரசு இந்திய நதிகள் அனைத்தையும் ஒன்றாக இணைக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களுக்கும் தண்ணீர் சமம் என்பதை நிச்சயமாக மத்திய அரசு கொண்டுவரும். அதற்கு மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்" என பேசினார்.