தமிழ்நாடு

கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

கன்னியாகுமரியில் கொட்டித் தீர்த்த கனமழை; ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

JustinDurai

கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டிய கனமழையால் ஆறுகள், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுப்பெற்று வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல் சூறைகாற்று, இடி, மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக இரணியலில் 28 செ.மீ. மழை பதிவானது. தொடர்ந்து மழை பெய்ததால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் தடுப்பணைக்கு மேல் வெள்ளம் சீறி பாய்வதால் அதன் வழியாக பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கனமழையால் மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக அதிகரித்தது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,112 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 42.13 அடியாக உள்ளது. அணையில் இருந்து 173 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. முக்கடல் அணையில் நீர்மட்டம் மைனஸ் அளவை எட்டியிருந்த நிலையில் தற்போது அணைக்கு 3 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் நீர்மட்டம் 1.2 அடியாக உயர்ந்துள்ளது. 

புயல் எச்சரிக்கையை தொடர்ந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இந்த மழையால் பல்லிக்கூட்டம் பகுதியில் இருந்து வரும் முல்லையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் முல்லையாற்றில் திக்குறிச்சி பகுதியில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. ஆற்றில் வந்த மழை தண்ணீர் அருகில் உள்ள வாழை தோட்டம் மற்றும் பயிர்களுக்குள் புகுந்தது.

மேலும் கனமழையால் கிள்ளியூரை அடுத்துள்ள பரக்காணி தடுப்பணை அருகே வைக்கல்லூர் பகுதி ஆற்றின் கரையில் நேற்று உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தண்ணீர் கிராமத்துக்குள் புகாதவாறு பொதுப்பணித்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

படங்கள்: ஜாக்சன் ஹெர்பி