தமிழ்நாடு

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு; மத்திய அரசின் அரசபயங்கரவாத செயல்: சீமான் கண்டனம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு; மத்திய அரசின் அரசபயங்கரவாத செயல்: சீமான் கண்டனம்

Veeramani

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினாலும், பிழையான நிர்வாக முடிவாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்திற்குள் தள்ளிவிட்டு பெட்ரோல்.டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைப்பது அரசபயங்கரவாதம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “பேரிடர் காலத்தில் வேலைவாய்ப்பின்மையாலும், வருவாய் இழப்பினாலும் மக்கள் பரிதவித்து வரும் வேளையில் அதுகுறித்துத் துளியும் சிந்தித்திடாது எரிபொருட்களின் விலையை அதிகப்படியான வரிவிகிதத்தால் உயர்த்துவது மனசாட்சியற்ற மாபாதகர்களால் நிகழ்ந்தேறும் மாபெரும் கொடுமையாகும்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், பிழையான நிர்வாக முடிவுகளாலும் நாட்டின் பொருளாதாரத்தை அதலபாதாளத்துக்குள் தள்ளி, பணவீக்கம், தொழில் முடக்கம் போன்றவற்றை ஏற்படுத்தி, அதன் விளைவாக விலைவாசி கடுமையாக உயர்ந்து மக்கள் தத்தளித்து வரும் நிலையில் தற்போது எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளையின் விலையையும் உயர்த்தி நாட்டு மக்களை வாட்டி வதைத்து மேலும் வறுமையின் பிடிக்குள் தள்ளுவது ஏற்கவே முடியாத கொடுஞ்செயலாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யாது அவர்களை மென்மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி வரும் கொடுங்கோன்மை ஆட்சிமுறையும், நிர்வாகச் செயல்பாடுகளும் வெட்கக்கேடானது.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்க எவ்வித நடவடிக்கையையும் முடுக்கிவிடாத பாஜக அரசு, எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று விலையைக் கண்மூடித்தனமாக அதிகரிப்பதென்பது மக்கள் நலனுக்குப் புறம்பான அரசப்பயங்கரவாதம். கடந்த டிசம்பர் மாதம் 650 ரூபாய் என்கிற அளவில் இருந்த எரிகாற்று உருளை ஒன்றின் விலையானது தற்போது 850 ரூபாய் எனக் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துளது. அதேபோல, வாகன எரி எண்ணெய்கள்களின் விலையும் 100 ரூபாய் என அபரிமிதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் எரி எண்ணெய்கள் மற்றும் எரிகாற்று உருளைகளைப் பயன்படுத்த முடியாத கொடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என தெரிவித்திருக்கிறார்