கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து இன்று பாஜகவினர் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது கும்பகோணம் ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி, திமுகவை கண்டித்து கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து, மோரி வாய்க்கால்களில் மதுவை கீழே கொட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மது பாட்டிலில் இருந்து மதுவை கீழே கொட்டுவதை பார்த்த குடிமகன் ஒருவர், கீழே கொட்டுவதற்கு பதிலாக தன்னிடம் கொடுக்குமாறு நீண்ட நேரமாக பாஜகவினரிடம் போராடினார். இதையடுத்து அவருக்கு 'கட்டிங்கை' கொடுத்து பாஜகவினர் வழி அனுப்பி வைத்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியது.
பரபரப்பான இந்த சாலையில் பாஜகவினர் நடத்திய இந்த நூதன ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு காவலர் கூட அங்கு பாதுகாப்பிற்கு இல்லை.
இது தொடர்பாக உளவுத்துறை மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, 'அப்படியா செஞ்சாங்க' 'எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கலையே' என சட்டம் ஒழுங்கு பிரச்சினையை பற்றி துளியும் கவலைப்படாமல் அலட்சியமாக பதில் அளித்தனர்.