தமிழ்நாடு

கவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது

rajakannan

மறைந்த கவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு 2017-க்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்குலாப் எழுதிய ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதை தொகுப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. காந்தள் நாட்கள் நூலை அகரம் பதிப்பகம் வெளியிட்டது. அதேபோல், கசாக்கின் இதிகாசம் என்ற மலையாள நூல் மொழி பெயர்ப்புக்காக யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகுல் ஹமீது என்ற இயற்பெயர் கொண்ட இன்குலாப் தனது புரட்சிகரமான கவிதைகள் வழியாக முற்போக்கு சிந்தனையார்கள் மத்தியில் இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக திகழ்ந்து வருகிறார். கீழ்வெண்மணி படுகொலை சம்பவத்தை ஒட்டி அவர் எழுதிய ‘மனுசங்கடா’ பாடல் இன்றும் எழுச்சியூட்டக்கூடியதாக உள்ளது. ஔவையார் உள்ளிட்ட அவரது நாடகங்களும் சிறப்பானவையாக பார்க்கப்படுகிறது. மக்கள் கவிஞர் என அழைக்கப்படும் கவிஞர் இன்குலாப் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.

எழுத்தாளரும் ஓவியருமான யூமா வாசுகியின் இயற்பெயர் மாரிமுத்து. யூமா வாசுகி என்ற புனைப்பெயரில் உனக்கும் உலகுக்கும், தோழமை இருள் உள்ளிட்ட கவிதை நூல்களையும், உயிர்த்திருத்தல் என்ற சிறுகதைப் படைப்பையும் எழுதியுள்ளார். நூண்கலை பயின்ற அவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வருகிறார். பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களை கொண்டு வந்துள்ளார்.