தமிழ்நாடு

கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனை - ஒரு பார்வை..!

கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட ஓமந்தூரார் மருத்துவமனை - ஒரு பார்வை..!

webteam

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தனி படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே முற்றிலும் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை தயார் செய்திருக்கிறது.

சென்னை, திருவல்லிக்கேணியில் அண்ணாசாலை மற்றும் வாலாஜா சாலை சந்திக்கும் சிக்னலில் அமைந்துள்ளது ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை. 9,30,297 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனை கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் புதிய தலைமைச் செயலகமாக கட்டப்பட்டது. பின்னர் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்த பிறகு மீண்டும் ஜார்ஜ் கோட்டை தலைமைச் செயலகமாக மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு அரசு மருத்துவமனையாக அது மாற்றப்பட்டது. தற்போது சென்னையில் பலராலும் பரிந்துரைக்கப்படும் மருத்துவமனைகளில் ஒன்றாக ஒமந்தூரார் மருத்துவமனை திகழ்கிறது.

இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் இடம் ஓமந்தூரார் எஸ்டேட் ஆகும். சுதந்திர இந்தியாவின் முதல் தமிழக முதலமைச்சரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் நினைவாக அந்த எஸ்டேட் உருவாக்கப்பட்டது. 1970ஆம் ஆண்டுகளில் இந்த எஸ்டேட்டை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி அரசுடமையாக்கினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஓமந்தூர் ரெட்டியார், 1947ஆம் ஆண்டு முதல் 1949ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தவர். இவரது ஆட்சிக்காலத்தில் தான் சாதிய அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் கொண்டுவரப்பட்டன என்பதும், ஒழுங்குபடுத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது பெயரில் உள்ள இந்த மருத்துவமனையில் தற்போது கொரோனா வைரஸுக்காக 400 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பறை வசதியுடன் கூடிய 30 அறைகளும், சிறப்பு சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் ஓமந்தூரார் மருத்துவமனையில் மேலும் பலநூறு படுக்கைகள் அமைக்க முடியும் எனக் கூறப்படுகிறது.