சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தாமாவே முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சாத்தான்குளம் காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், வருவாய்த் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் தடயவியல் துறை அதிகாரிகள் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சென்று அங்குள்ள தடயங்களை சேகரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.