தமிழ்நாடு

டன் கணக்கில் அரிசி..நிற்காமல் சென்ற ஆந்திர லாரி : பைக்கில் விரட்டிப் பிடித்த அதிகாரிகள்!

டன் கணக்கில் அரிசி..நிற்காமல் சென்ற ஆந்திர லாரி : பைக்கில் விரட்டிப் பிடித்த அதிகாரிகள்!

webteam

ஆம்பூர் அருகே சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் விரட்டி சென்று பிடித்தனர். அதில் கடத்திச் செல்லப்பட்ட 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்ட எல்லைப்பகுதியான மாதனூர் பகுதியில் கொரோனா வைரஸ் நோய்தொற்று காரணமாக வெளி மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்களை கண்காணிக்க சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடியில் வருவாய்த்துறையினர், சுகாதாரத் துறை, காவல் துறை என அனைத்துத் துறையிலும் ஒன்றிணைந்து தடுப்பு பணியில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

அதன்படி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சோதனைச்சாவடியில் வாணியம்பாடி தனித்துணை வட்டாட்சியர் குமார் மற்றும் மேல் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி சோதனை சாவடியில்  நிற்காமல் சென்றது. உடனடியாக துணை வட்டாட்சியர் குமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விக்ரம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று மாதனூர் மேம்பாலம் அருகே லாரியை மடக்கி பிடித்தனர்.

லாரி ஓட்டுநர் திடீரென தப்பி ஓடினார். பின்னர் லாரியை சோதனை செய்ததில் சுமார் 15 டன்னுக்கும் மேலாக ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. உடனடியாக ஆம்பூர் வட்டாட்சியர் பத்மநாபனுக்கு தகவல் கொடுக்கப்பட்டு லாரியை பறிமுதல் செய்து ஆம்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட லாரி சித்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான லாரி என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.