தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளராக இருந்தவர் சேகர். இவர் கொரோனா பணி நிமித்தமாக நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தொட்டியம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் சிகிச்சை பலனில்லாமல் திருச்சி அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானதால் தொட்டியம் காவல்துறை வழக்குப்பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.