மயிலாடுதுறையில் உயிரிழந்த தாய் மற்றும் மனைவிக்கு கோயில் கட்டிய ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர், தனது 73-வது பிறந்தநாளை அவர்களின் சிலைகளின் முன்பு கேக் வெட்டி கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை கஸ்தூரிபாய் தெருவைச் சேர்ந்தவர் மதன்மோகன் (73). ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளரான இவர், மறைந்த தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாள் ஆகியோரை நினைவுகூறும் வகையில் தனது வீட்டின் முன்பு கோயில் கட்டி இருவருக்கும் தத்ரூபமாக சிலை வடித்து தினந்தோறும் விளக்கேற்றி தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் வித்தியாசமாகவும் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையிலும் மதன்மோகன், தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது தாய் கமலாம்பாள் மற்றும் மனைவி மீனாட்சியம்மாள் ஆகியோர் உயிரோடிருப்பதாக பாவித்து அவர்களின் சிலைக்கு முன்பு கேக்வெட்டினார்.
பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல வந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கியதுதோடு அப்பகுதி மக்கள் 100 பேருக்கு காமாட்சி விளக்கு உள்ளிட்ட நலஉதவிகளை மதன்மோகன் வழங்கினார். முன்னதாக தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது மனைவி மற்றம் தாயார் சிலைகளுக்கு பால் மற்றும் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து வணங்கினார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.