தமிழ்நாடு

”தமிழக அரசு இதனை செய்தால் ஆளுநருக்கு வேறு வழியே இல்லை” - கற்பவிநாயகம், நீதிபதி(ஓய்வு)

Sinekadhara

தமிழக அரசு நீட் மசோதாவை மீண்டும் திருத்தம் செய்து அனுப்பும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதை தவிர ஆளுநருக்கு வேறு வழியே இருக்காது என்று ஓய்வுபெற்ற நீதிபதி கற்பக விநாயகம் தெரிவித்திருக்கிறார். 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்புவதற்கான காரணங்களை பிப்ரவரி 1ஆம் தேதி அரசுக்கு விளக்கியுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், நீட் விலக்கு மசோதா உச்ச நீதிமன்ற உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளது எனவும், பொருளாதாரீதியில் பின் தங்கியுள்ள மாணவர்களை நீட் தேர்வு காக்கிறது எனவும் காரணங்களை குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் கூறுகையில், நீட் விலக்கு மசோதா குறித்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆளுநர் எந்தவித தாக்கமும் இல்லாமல் அதுகுறித்து விரைந்து முடிவெடுத்திருக்க வேண்டும். 7 பேர் விடுதலை விவகாரத்திலும் இதேபோன்றுதான் ஆளுநர் நடந்துகொண்டார். இது ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே சரியான இணக்கம் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. ஆளுநர் மசோதாவில் என்னென்ன திருத்தம் செய்யலாம் என்பதை யோசித்திருக்கலாம் அல்லது ஏன் மறுக்கிறார் என்பது குறித்த காரணத்தை தெளிவாகக் கூறியிருக்கலாம்.

இரண்டாவது, ஏ.கே ராஜனின் அறிக்கையை அடிப்படையாகக்கொண்டுதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதையாகிலும் ஆளுநர் கருத்தில் கொண்டிருந்தால் திருப்பி அனுப்பவேண்டிய அவசியம் வந்திருக்காது. ஆனால் தமிழக அரசு இந்த மசோதாவை மீண்டும் திருத்தம் செய்து அனுப்பும்பட்சத்தில் அதை ஏற்றுக்கொள்வதை தவிர ஆளுநருக்கு வேறு வழியே இருக்காது. ஆளுநர் சற்று அவசரப்பட்டுவிட்டார் என்றுதான் தோன்றுகிறது.