தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மி குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

ஆன்லைன் ரம்மி குறித்து 2 வாரங்களுக்குள் அறிக்கை - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு

Sinekadhara

ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க ஏதுவாக இரண்டு வாரங்களுக்குள் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாடினால் ஏற்படக்கூடிய நிதி இழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறியவும், இந்த விளையாட்டினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இந்த விளையாட்டுகளை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்து ஆய்வு செய்து அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழக சட்டமன்றத்தில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதை எதிர்த்து சில நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான சட் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். இதைத் தொடர்ந்து தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு மனு இன்னமும் விசாரணை எடுத்துக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் இந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சினேகா தற்கொலை தடுப்பு நிறுவனத்தில் மருத்துவராக உள்ள லதா விஜயகுமார், இந்த ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ஏற்படும் மனரீதியான பிரச்னைகள் குறித்து ஏற்கெனவே நிறைய தரவுகள் வைத்துள்ளார். இதை தனது ஆய்வில் தெரிவிக்கப் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வேதியியல் துறை பேராசிரியராக உள்ளவர் சங்கரராமன். இவரும் நிபுணத்துவம் வாய்ந்தவர். பல்வேறு தரவுகளை தன்னிடம் வைத்துள்ளார். அதை இந்த கமிட்டியிடம் சமர்ப்பிக்க உள்ளார். தமிழக காவல்துறையில் குற்ற ஆவண காப்பக கூடுதல் டிஜிபியாக உள்ள வினித் தேவ் வான்கடேவும் இந்தக் குழுவில் உள்ளார். தமிழகம் முழுவதும் ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த காவல்துறை புகார்களின் புள்ளிவிவரங்கள் & இந்த ஆன்லைன் விளையாட்டால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை இவர் இந்த கமிட்டியிடம் சமர்ப்பிக்க உள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழில் படிப்புகளில் 7.5% உள் ஒதுக்கீடு கொடுப்பதற்கும் இதுபோன்று ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. தரவுகளுடன் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. நீதிமன்றத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியவில்லை. எனவேதான் இதுபோன்று குழு அமைத்து அதன் தரவுகள் மூலம் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசின் சட்டத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.