சின்னத்தாய் PT
தமிழ்நாடு

நெல்லை | சாதி பாகுபாடு? பெண் கவுன்சிலரின் ராஜினாமா முடிவு... கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்!

நெல்லை மாநகராட்சி அதிகாரிகளுக்கிடையே சாதிய பாகுபாடு தலைவிரித்தாடுவதாக கூறி பதவி விலகுவதாக பெண் கவுன்சிலர் எழுதிய ராஜினாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PT WEB

நெல்லை மாநகராட்சியின் 36 வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த சின்னதாய் என்பவர் பெண் கவுன்சிலராக உள்ளார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக மேயருக்கு எழுதிய கடிதம் நேற்று வெளியாகியது.

அந்த கடிதத்தில் சின்னத்தாய், “மாநகராட்சி ஆணையர் உயர்ஜாதி மாமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தன்னை பழிவாங்கும் நோக்கில், எனது வார்டுக்கு தண்ணீர் வழங்கும் நடைமுறையை மாற்றி இருக்கிறார்” என குற்றம் சாட்டியுள்ளார். மாநகராட்சி அதிகாரிகளிடம் சாதி தலைவிரித்து ஆடுவதாகவும், நாடாளுமன்ற தேர்தலின் போது பல்வேறு வகையில் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்தக் கடிதம் குறித்து நெல்லை மாநகராட்சி மைய சரவணனிடம் புதியதலைமுறை கேட்ட போது அதுகுறித்து எதுவும் தெரியாது என்றார். தொடர்ந்து கவுன்சிலர் சின்னத்தாயின் கணவர் கிருஷ்ணனை நாம் தொடர்புக்கொண்டு பேசிய பொழுது, அதிகாரபூர்வமாக மாநகராட்சி ஆணையரிடம் ராஜினாமா கடிதத்தை அளிப்பதில்லை என்றார்.

இந்நிலையில் பாளையங்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்ததாக கூறிய கிருஷ்ணன், அவரின் அறிவுத்தலை ஏற்று ராஜினாமா முடிவை தாங்கள் கைவிட்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.