தெப்பக்காடு முகாமில் குட்டி யானை பாரமரிக்கப்பட்ட காட்சி புதிய தலைமுறை
தமிழ்நாடு

தெப்பக்காடு முகாம்: தாயைப் பிரிந்த குட்டி யானை உடல்நலக்குறைவால் மரணம்!

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டியானை உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

PT WEB

செய்தியாளார்: மகேஸ்வரன்

தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டியானை, உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

கடந்த மார்ச் மாதம் ஈரோடு மாவட்டம் பண்ணாரி வனப்பகுதியில் தாயைப் பிரிந்த நிலையில் குட்டி யானையொன்று மீட்கப்பட்டது. குட்டியை தாய் யானையுடன் சேர்ப்பதற்கு வனத்துறையினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

தெப்பக்காடு முகாமில் குட்டி யானை பாரமரிக்கப்பட்ட காட்சி

இதனால் வனத்துறையினர் குட்டி யானையை மேல் பராமரிப்பு செய்வதற்காக தெப்பக்காடு வளர்ப்பு பயணிகள் முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த 7 மாதங்களாக குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்தது. கோவையிலிருந்து தாயை பிரிந்த நிலையில் மீட்டுக் கொண்டுவரப்பட்ட மற்றொரு குட்டி யானையுடன் சேர்த்து இந்த குட்டி யானை பராமரிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு குட்டி யானையின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. யானை குட்டி சரியாக உணவு உட்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் வனத்துறையினர் அதற்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று மதியம் முதல் யானை குட்டியின் உடல்நிலை மிகவும் மோசமானது. வனத்துறையினர் தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் குட்டி யானை உயிரிழந்தது.

தெப்பக்காடு முகாமில் குட்டி யானை பாரமரிக்கப்பட்ட காட்சி

குட்டி யானையின் உடல் முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் வித்யா முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. யானை குட்டியின் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் கூறுகையில், “யானை குட்டி வனப்பகுதியில் இருந்து மீட்டு முகாம் கொண்டுவரப்பட்டதிலிருந்து சோர்வாகவே காணப்பட்டது. குட்டி யானைக்கு போதிய அளவில் தாய்ப்பால் கிடைக்காத காரணத்தால் அது போதுமான அளவு உடல் வளர்ச்சி மற்றும் எடை இல்லாமல் இருந்தது.

தெப்பக்காடு முகாமில் குட்டி யானை

இருப்பினும் குட்டி யானைக்கு தேவையான அனைத்து சிகிச்சைகள் மற்றும் உணவுகளும் முறையாக வழங்கப்பட்டு வந்தன. கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு குட்டி யானைக்கு உடல்நிலை மோசமாக துவங்கியது. அப்போது முதல் தொடர்ச்சியாக யானை குட்டிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இன்று அதிகாலை அது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்திருக்கிறது” என்றனர்.