ஆதார் அடையாள அட்டையை போல டிஜிட்டல் வழியாக ஒரு அட்டையை உருவாக்க மத்திய அரசு முயல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய டிஜிட்டல் அட்டையில், நமது அனைத்து அடையாள அட்டைகளையும் ஒரேநேரத்தில் இணைக்க முடியுமென சொல்லப்படுகிறது.
மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்பப்பிரிவு, நமது அடையாள அட்டைகள் அனைத்தையும் டிஜிட்டல் வழியாக ஒன்றோடொன்று தொடர்புபடுத்தும் (Federated Digital Identities) முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி செய்வதன்மூலம் ஓட்டுநர் உரிமம், பேன்கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட பல அடையாள அட்டைகளை இணைய வழியில் நம்மால் இணைக்க முடியும் என்கின்றனர். இவை அனைத்தையும் இணைத்து, அதற்கென தனியாக ஒரு டிஜிட்டல் கார்டு தர அரசு முனைவதாக தெரிகிறது. இந்த புதிய கார்டு, ஆதார் கார்டு எண்ணைப் போல இருக்குமென கூறப்படுகிறது.
இதுதொடர்பாக ஆங்கில செய்தித்தாளொன்றில் வெளியான தகவலின்படி, “இந்தத் திட்டத்தில் அனைத்து கார்டுகளும் ஒன்றோடொன்று கொண்டுவரப்பட்டு இணைக்கப்படும். இதன்மூலம் மக்களின் பணிகள் யாவும் எளிமையாகும். அதாவது, இது வந்தபின்னர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கார்டு எண்ணை தேடி அலைய வேண்டாம். இந்த ஒரு எண்ணை கொடுத்தாலே போதும்” என நமக்கு தெரிகிறது. இந்த கார்டை, ஃபெடரெல் டிஜிட்டல் ஐடெட்டிட்டி (Federal Digital Identity) என குறிப்பிடுகின்றனர். இதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தரும் எல்லா அடையாள அட்டைகளையும் இணைக்க முடியுமென சொல்லப்படுகிறது. இதில் ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய கே.ஒய்.சி. எனப்படும் அடையாளப் பரிசோதனை இணைய வழியாகவோ நேரடியாகவோ மேற்கொள்ளப்படுமென சொல்லப்படுகிரது.
இப்படி ஒருகுடையின்கீழ் அனைத்து தகவல்களையும் கொண்டு வருகையில், தகவல்கள் கசியும் அபாயமிருப்பதாகக்கூறி சில வல்லுநர்கள் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இருப்பினும் இதுவரை இத்திட்டம் குறித்து முழுமையான அறிவிப்பு அரசு தரப்பிலிருந்து வரவில்லை என்பதால் தகவல்கள் வெளியிடுவதற்கு வல்லுநர்கள் தயக்கம் காட்டுகின்றனர். பிப்ரவரி 27-ம் தேதி, மத்திய அரசு இந்த புதிய கார்டு குறித்த தகவல்களை முறையாக தகவல்கூறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய செய்தி: இரவில் ஏடிஎம் மிஷினை உடைக்க முயற்சி.. பகலில் சுதந்திரமாக நடமாட்டம் - சிக்கிய குற்றவாளி!