தமிழ்நாடு

சென்னையில் வாடகைக்கு வீடு தேடிச் சென்ற இளைஞர் கைது..! - நடந்தது என்ன ?

webteam

சென்னையில் வீடு வாடகைக்கு கேட்டுச் சென்ற இளைஞர் ஏமாற்றப்பட்டு, பின்னர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.

சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் வசித்து வருபவர் வெங்கடேஷ் (26). இவர் கிராபிக்ஸ் டிசைனராக பணியாற்றி வருகிறார். வாடகைக்கு வீடு வேண்டும் என விளம்பர நிறுவனமான சுலைக்கா ஆன்லைன் நிறுவனத்தை கடந்த 1ஆம் தேதி இவர் தொடர்பு கொண்டார். அவர்கள் மூலமாக ஒரு நபரின் எண் கிடைக்க, அவருடன் பேசியதில் தான் நவின் என்றும், வீடு காட்ட ஆள் அனுப்பி வைப்பதாகவும் கூறி, உடன் ஒருவரை அனுப்பி வைத்துள்ளார்.

(வெங்கடேஷ்)

இதையடுத்து கண்ணகி நகரை சேர்ந்த மகேஷ் (34) என்ற நபர் வந்து வீட்டை அழைத்துச்சென்று காண்பிப்பதாகக் கூறி வெங்கடேஷிடம் ரூ.4000 ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு எதுவும் வாடகைக்கு பார்த்து கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. பின்னர் தொடர்பு கொண்டால் வெங்கடேஷின் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், பறிபோன பணத்தை மீட்க எண்ணி தனது நணபர்கள் மூலம் வீடு வாடகைக்கு தேவை என்பது போல் பேசி மகேஷை தரமணி எம்.ஜி.ஆர்.சாலை அருகே வரவழைத்துள்ளார். அங்கே மகேஷை அடித்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை நண்பர்களின் உதவியுடன் பிடிங்கிச் சென்றுள்ளார்.

(மகேஷ்)

இதுதொடர்பாக மகேஷ், தரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வழிப்பறியில் ஈடுபட்டதாக வெங்கடேஷ் (26), சதீஷ்(23) மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த பரத்(30) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். விசாரணையில் ரூ.4,000 ரூபாயை இழந்த காரணத்தால் பழிவாங்கும் நோக்கத்தோடு பிடிங்கிச் சென்றதாகவும், தாங்கள் வழிப்பறி கொள்ளையர்கள் இல்லை எனவும் தெரிவித்தனர்.

இரு தரப்பினரின் புகாரையும் பெற்றுக்கொண்டு இரண்டு வழக்குகளை பதிவு செய்த போலீசார் ஏமாற்றிய வழக்கில் மகேஷையும், வழிப்பறி வழக்கில் வெங்கடேஷ் உட்பட மூன்று பேர் என நான்கு பேரையும் கைது செய்தனர். அவர்களை தற்போது தரமணி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.